தமிழக அரசு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை! தாய், மகன்கள், மகள் உள்பட 4 பேர் கைது
தஞ்சாவூர்: திமுக முன்னாள் எம்பியும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயனின் வீட்டில் கொள்ளையடித்ததாக புகாரின் பேரில் இரு பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடித்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது முதல் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக இருந்து வருபவர் ஏ.கே.எஸ்.விஜயன். முன்னாள் எம்பியான இவர் திமுகவின் மாநில விவசாய செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இவரது வீடு தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே சேகரன் நகரில் உள்ளது. விஜயன் பணிநிமித்தமாக அடிக்கடி டெல்லி செல்லும் நிலை இருப்பதால் அவரது குடும்பத்தினர் அந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி அவர்களும் ஒரு குடும்ப விழாவுக்காக வெளியூர் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் அடுத்த நாள் நவம்பர் 28ஆம் தேதி வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வீட்டில் இருந்த பணம், நகைகளை காணாமல் விஜயன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. அந்த வீட்டில் 87 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கொள்ளையர்களை 7 நாட்கள் கழித்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் தருமபுரியை சேர்ந்த தாய், மகன்கள், மகள் என ஒரே வீட்டைச் சேர்ந்த 4 பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே அறை எடுத்து தங்கி விஜயன் வீட்டை நோட்டமிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் தருமபுரிக்கு விரைந்து சென்று ராயல் கரை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன்கள் சாதிக் பாஷா (33), மொய்தீன் (37), மகள் ஆயிஷா பர்வீன் (30), மனைவி பாத்திமா ரசூல் (54) ஆகியோரை கைது செய்து 87 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 1999 லோக்சபா தேர்தலில் நாகை தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து 2004 மற்றும் 2009 லோக்சபா தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவதே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியின் பொறுப்பாகும். முதல்வர் அல்லது அமைச்சர்கள் அரசு முறை பயணமாக டெல்லிக்குச் செல்லும்போது அலுவல் ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும் டெல்லி சிறப்புப் பிரதிநிதியே கவனித்துக் கொள்வார்.












Click it and Unblock the Notifications