தஞ்சாவூர் செல்லும் வழியில் வண்டியை நிறுத்திய ஸ்டாலின்.. முகாமில் திடீர் விசிட்! ஆடிப்போன அதிகாரிகள்!
தஞ்சாவூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்தார். இன்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் தஞ்சாவூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, மகளிர் உரிமைத்தொகை முகாம் நடைபெற்ற இடத்தில் வண்டியை நிறுத்தி அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருச்சியில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார். 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகலில் தஞ்சாவூருக்கு நோக்கி கிளம்பினார்.

தஞ்சாவூர் செல்லும் வழியில்: திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் செங்கிப்படி அருகே உள்ள மனையேறிபட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பம் வழங்கும் முகாம் நடைபெற்று வந்தது. அதை அறிந்த முதல்வர் திடீரென அந்த முகாமிற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் பெற்றுள்ள குடும்பத் தலைவிகள் ஏரளாமானோர் அங்கு கூடியிருந்தனர். அவர்களிடம் இந்த திட்டத்தால் உங்களுக்கு எந்தவகையில் பயன் கிடைக்கும்? மாதா மாதம் வரும் 1000 ரூபாயில் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். சேரில் அமர்ந்திருந்த பெண்களிடம் ஒவ்வொருவராகச் சென்று விசாரித்தார் ஸ்டாலின். அப்போது அவர்கள் எழ முயல, அவர்களை சேரில் அமரச் சொல்லி தான் நின்றபடியே அவர்களிடம் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
உட்கார வைத்து பேசிய முதல்வர்: மேலும், முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் விண்ணப்ப படிவத்தை நிரப்ப முடியாதவர்களுக்கு விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கான ஆட்கள் அங்கு இருக்கின்றனரா என்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம், முகாம்களில் எவ்வளவு பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர் என்ற விவரங்களையும் கேட்டறிந்தார். அதன்பிறகு தஞ்சாவூர் நோக்கிப் புறப்பட்டார்.

தஞ்சாவூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். இன்று மாலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மையக் கட்டடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 140 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம், சூரிய ஒளி மின் உற்பத்தி மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களை அவர் திறந்து வைக்கிறார்.

பின்னர் புதிதாக அமைக்கப்பட உள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மகாராஜா மஹாலில் நடைபெறும் பந்தல் சிவா இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.












Click it and Unblock the Notifications