தஞ்சாவூரை கட்டம் கட்டும் காங்கிரஸ்.. நேற்றே ஒன் இந்தியா எழுப்பிய கேள்வி! இன்று திமுக மாஜிக்கு செக்
தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக தகவல் வருகிறதே என நேற்று ஒன் இந்தியா பேட்டியில் பீட்டர் அல்போன்சிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இன்று தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியை கேட்டு இருக்கிறது அக்கட்சி.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆளும் பாஜகவும், எதிர்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மாநிலக் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளில் தற்பொழுது அரசியல் கட்சியில் இறங்கி விட்டன.

தமிழ்நாட்டில் காங்கிரஸ், விசிக, மமக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், கொமதேக, வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்று உள்ளதாக செய்திகள் வருகின்றன. அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன, தேமுதிக, பாமக, பாஜக போன்ற கட்சிகளின் நிலை என்னவென்று இன்னும் தகவல் வரவில்லை. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது ஒன் இந்தியா செய்தியாளர், “தஞ்சாவூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக தகவல் கிடைத்து உள்ளது. ஏற்கனவே பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. தற்போது அது திமுக வசம் சென்று உள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுகவுக்கு வழங்கப்படுமா? அல்லது காங்கிரஸ் கட்சிக்கு கேட்டு உள்ளீர்களா?” என வினவினோம்.
இதற்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்ற ஆசை காங்கிரஸ்காரர்களுக்கு இருக்கிறது. அதேபோல திமுக போட்டியிட வேண்டும் என்ற ஆசை திமுகவினருக்கு இருக்கிறது. கூட்டணியை பற்றி பேசுவதற்காக இரு கட்சிகளும் குழு அமைத்து உள்ளன. அந்த குழுவின் தலைவர் முகுல் வாஸ்னிக் தமிழ்நாடு வருகிறார். அவர் திமுக குழுவுடன் பேசுகிறார். பல விதமான வாய்ப்புகளை நாங்கள் வைத்து உள்ளோம். வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளை கொடுக்க வேண்டும்.
EXCLUSIVE: நிதிஷ் போனது 'இந்தியா’க்கே நல்லது.. காங்கிரஸ் தியாகம் செய்யவும் தயார் - பீட்டர் அல்போன்ஸ்
அதே நேரத்தில் கூட்டணியும் வெல்ல வேண்டும். இரண்டையும் மனதில் கொண்டு வந்து யார் யாருக்கு எங்கெங்கே வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளதோ அங்கே அவர்கள் போட்டியிடுவதுதான் கூட்டணிக்கு வலு சேர்க்கும். அந்த வகையில் யாருக்கு எந்த இடம் என்பதை எல்லாம் அந்த குழுவே முடிவு செய்யும். உங்களுடைய ஆசையை நான் மேலே தெரிவிக்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுடன் சேர்த்து திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications