அமைச்சர் உதயநிதி வரும்வரை மாணவர்கள் பட்டினியாக காத்திருந்தார்களா? உண்மை என்ன? ஹெட் மாஸ்டர் விளக்கம்!
அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்வு தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வர தாமதமானதால், பள்ளி மாணவர்கள் சாப்பிடாமல் 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் தஞ்சாவூர் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
இந்த பள்ளிக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை தர தாமதமானதால் மாணவர்கள் சாப்பிடாமல் காத்திருக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், உதயநிதி வருகை தாமதம் பற்றிய தகவல் கிடைத்ததுமே மாணவர்கள் சாப்பிட வைக்கப்பட்டதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

பரவிய தகவல்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி, தஞ்சாவூர் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு திமுக சார்பில் மதிய உணவு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தாமதமாக வர நேர்ந்ததால், அதுவரை மாணவர்கள் மதிய உணவு உண்ணாமல் காத்திருக்க வைக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. திமுகவினர் இதனை மறுத்த நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தலைமை ஆசிரியர் விளக்கம்
தஞ்சாவூர் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளி தலைமை ஆசிரியர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகர திமுக சார்பில் தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு வழங்கும் விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது.

தாமதம் ஆனதால்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்கு தாமதமானதால் மாணவர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் செய்தி ஊடகத்தில் அமைச்சர் உதயநிதி வரத் தாமதமானதால் மாணவர்களை உணவருந்தாமல் அமர வைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தி எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில், அமைச்சர் உதயநிதி வர தாமதமாகும் என தகவல் தெரியவந்தவுடன் திமுகவினர் மாணவர்களை உணவருந்தாமல் அமர வைக்கக்கூடாது எனக் கூறி மாணவர்களுக்கு மதியம் 12.30 மணிக்கே உணவு வழங்கத் துவங்கிவிட்டனர்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு மட்டும்
1 முதல் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உணவருந்தி விட்ட நிலையில் 14.03.2023 அன்று மதியம் 02.30 மணிக்கு பிறகு பொதுத்தேர்வு எழுதி வந்த 11ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் உணவருந்த அமர்ந்தபோது வருகை புரிந்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு தனது கரத்தினால் உணவளிக்க விரும்பி உணவு பரிமாறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்தது எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வளித்த நிலையில் தவறான செய்தி வெளியானது மிகவும் வருத்தம் அளிக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications