அண்ணா சிலைக்கு திமுக கொடியுடன் பாஜக கொடியை போர்த்தியதால் பரபரப்பு.. தஞ்சாவூரில் என்ன நடந்தது?
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையின் மீது திமுக மற்றும் பாஜகவின் கொடிகளை இணைத்து போர்த்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை உள்ளது. அண்ணா புத்தகம் படிப்பது போல் அந்த சிலை என்பது அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரின் அடையாளமாக இந்த இடம் உள்ளது.
இந்நிலையில் தான் இன்று காலையில் அண்ணா சிலையின் கழுத்தில் கட்சிக்கொடிகள் போர்த்தப்பட்டு இருந்தன. திமுக மற்றும் பாஜகவின் கொடிகள் சிலையின் கழுத்தில் இருந்தது.

திமுக - பாஜக கொடிகளை ஒன்றாக இணைத்து அண்ணாவின் கழுத்தில் போர்த்தப்பட்டு இருந்தது. அரசியலில் திமுகவும், பாஜகவும் எதிரெதிர் துருவமாக உள்ளன. இப்படியான சூழலில் திமுக - பாஜக கொடிகள் அண்ணா சிலை மீது போர்த்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து அண்ணா சிலையின் கழுத்தில் கிடந்த திமுக - பாஜக கொடிகளை அகற்றினர். நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் வந்து அண்ணா சிலை மீது திமுக - பாஜக கொடியை போர்த்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications
