பட்டுக்கோட்டையில் கொலையான பாஜக பிரமுகர் சரண்யா யார் தெரியுமா? பிடிஆர் காரில் செருப்பு வீசியவர்
தஞ்சை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே படுகொலை செய்யப்பட்ட பாஜக பெண் பிரமுகர் யார் தெரியுமா? அவர்தான் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காரில் செருப்பு வீசியவர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி சரண்யா என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் மதுரை மத்திய தொகுதி பாஜக மகளிர் அணி பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சரண்யா கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தாராம். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக தெரிகிறது.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சரண்யா யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இவர்தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசியவர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையை சேர்ந்த லட்சுமணன் பணியின் போது வீரமரணமடைந்தார். அப்போது அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையத்தில் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பாஜகவினர் சிலர் அவரது காரை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதில் சிலர் தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் செருப்பை வீசினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிஆருக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் செருப்பு வீசியதாக பாஜக மகளிரணியை சேர்ந்த சரண்யா உள்பட 30 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் என் கார் மீது செருப்பு வீசிய சிண்ட்ரெல்லா எப்போது வேண்டுமானாலும் தனது ஒற்றை செருப்பை என் அலுவலகத்திற்கு வந்து பெற்று கொள்ளலாம் என பிடிஆர் ட்வீட் போட்டிருந்தார்.
அந்த நிலையில்தான் பாஜக மகளிரணியை சேர்ந்த சரண்யா, தெய்வானை, தனலட்சுமி ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அதில் அந்த செருப்பு தனலட்சுமியினுடையது என தெரியவந்தது. அவருடைய செருப்பைத்தான் மற்றவர்கள் எடுத்து வீசியதும் தெரியவந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு போட்டும் நீதிபதி அந்த வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
நீதிபதி புகழேந்தி கூறுகையில், "ஒரு அமைச்சர் பயணிக்கும் போது அதிலும் அவருடைய வாகனத்தில் தேசியக் கொடி இருந்தது. அந்த வாகனத்தின் மீது செருப்பு வீசுவது என்பது தேசியக் கொடியை அவமதிக்கும் செயலாகும். அது மட்டுமில்லாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சரை திட்டி கோஷம் எழுப்பி உள்ளீர்கள்.
வ.உ.சிதம்பரனார், காந்தியடிகள் ஆகியோர் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைவில் கொள்வது அவசியம். அமைச்சர் ஒருவரின் தேசியக் கொடி மீது காலணி எறிந்த விவகாரத்தில் வழக்கை ரத்து செய்ய இயலாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications