தமிழ் மகன் உசேனுக்கு முக்கியத்துவம்.. அதிமுகவில் ஈபிஎஸ் கதி என்னவாகும்? தீர்ப்பை காட்டி டிடிவி கேள்வி
அதிமுகவில் இரட்டை இலை சின்னம் விஷயத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கதி என்னவாகும்? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தஞ்சாவூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கான படிவத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான் தீர்ப்பை சுட்டிக்காட்டிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கதி என்னவாகும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவரொவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கேஎஸ் தென்னரசு, ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அமமுக சார்பில் சிவபிரசாந்த், உள்ளிட்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடந்தது.

அமமுக மனு ஏற்பு
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுகவில் நிலவும் குழப்பத்துக்கு மத்தியில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் அணி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் சீமான் உள்பட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

அமமுக விலகல்
இந்நிலையில் தான் குக்கர் சின்னம் ஒதுக்காததால் அமமுகவும் போட்டியில் இருந்து விலகுவதாக அறுிவித்துள்ளது. இந்நிலையில் தான் இன்று தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாததால் போட்டியில்லை.

குக்கர் சின்னம் தந்திருக்க வேண்டும்
இடைத்தேர்தலில் 10 முதல் 15 நாட்களாக வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனுத்தாக்கல் உள்ளிட்ட பணிகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தோம். துணை பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர்கள் தொகுதியில் தேர்தல் பணியை துவங்கிவிட்டனர். ஆனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கடிதம் எங்களுக்கு 7ம் தேதி தான் வந்தது. தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை எங்களுக்கு தந்திருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் செல்ல முடியாத நிலை
ஏனென்றால் நான் ஆர்கே நகர் தேர்தலில் அந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். சட்டசபை பொதுதேர்தலில் கேட்டிருந்தேன். தந்தார்கள். தற்போது தர மறுத்துவிட்டனர். குக்கர் சின்னம் கொடுக்க இயலாது என 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தால் உச்சநீதிமன்றம் சென்று இருப்போம். உச்சநீதிமன்றம் சின்னம் வழங்க கூறியிருக்கும். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

எடப்பாடி பழனிச்சாமி கதி என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் கையெழுத்து போடமாட்டார்கள். தமிழ் மகன் உசேனுக்கு தான் இரட்டை இலை சொந்தம் என நீதிமன்றம் கூறியுள்ளது. இதை கூறினால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தமிழ் மகன் உசேன் எங்கள் அணி தான் என கூறுவார்கள். ஒருவேளை நாளை தமிழ் மகன் உசேன் தான் நிரந்தரமாக கையெழுத்திட வேண்டும் என்று கூறிவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி கதி என்னவாகும்?. இருப்பினும் தற்போதைய தீர்ப்பு என்பது இந்த தேர்தலுக்கான இடைக்கால தீர்ப்பாக தான் இது உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்ன வருகிறது என்பதை பொறுத்திருந்து நாம் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications