என் பெயரையே அழிச்சுட்டாங்க.. அசிங்கப்படுத்துறாங்க.. கும்பகோணத்தை அதிர வைத்த பெண் ஊராட்சி தலைவர்
தஞ்சாவூர்: என் பெயரையே அழிச்சுட்டாங்க என்று கும்பகோணம் அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சுவாமி மலை காவல் நிலையத்தில் அவர் என்ன புகார் அளித்தார் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயரை அலுவலகங்களில் பொறிப்பார்கள். ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பெயரையும் பொறிப்பார்கள். ஆனால் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் மட்டுமே அந்த பதவியில் யாரும் இல்லை என்பதை குறிக்கும் வகையில் அழித்துவிடுவார்கள். இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும்.

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த 49 வயதாகும் மலர்கொடி சீனிவாசன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த கடிச்சம்பாடி ஊராட்சி மன்றத்திற்கு புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஆண்டு ஆகஸ்ட 10-ம் தேதி திறந்து வைத்தார்.
அதன் பிறகு, அந்த அலுவலகத்தின் முகப்பில் தலைவரான அவரது பெயர் பெயிண்டால் எழுதப்பட்டு இருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் கட்டுப் பாடுகள் விதிமுறைக்கு வந்ததால், தலைவரான அவரது பெயர் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, பிளக்ஸ் வைத்து மறைக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததால், ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சீனிவாசன், அவரது பெயரை மறைத்துள்ள பிளக்ஸை அகற்றிய போது, அவரது பெயர் அழிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சீனிவாசன், சுவாமி மலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்,
அந்த புகாரில் "கடிச்சபாடியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவராக நான் பதவியில் இருக்கிறேன். ஆனால் என்னை நிர்வாகம் செய்ய விடாமல் சிலர் சமூக ரீதியாகத் தடுத்து வருகிறார்கள். புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள எனது பெயரை பாமக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் என்.சிவபாலன் மற்றும் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.செல்வக்குமார் ஆகியோர் பெயிண்டால் அழித்திருக்கிறார்கள்.
மேலும் அவர்கள் இதே போல் என்னைப் பற்றி வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்கள். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவியான மலர்கொடி சீனிவாசன் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications