பண்டிகையை கொண்டாடுங்கலே.. தஞ்சாவூர் மட்டுமல்ல காவிரி டெல்டாவின் பல வருட கனவு சார்.. சபாஷ் ரயில்வே
பண்டிகையை கொண்டாடுங்களே.. ரயில் தொடர்பான தஞ்சை மக்களின் நீண்டகால கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. ஆயுத பூஜை பண்டிகையுடன் சேர்த்து, ரயில் வந்ததற்காக இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் கொண்டாடினார்கள். திருச்சியில் தஞ்சை வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில், இன்று முதல் திங்கள், வியாழன் ஆகிய 2 நாட்கள் தவிர 5 நாட்களுக்கு இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
காவிரி தாய் கரைபுரண்ட கடலை நோக்கி ஓடும் தஞ்சாவூர் டெல்டாவில், பசுமை போர்த்திய வயல்வெளிகளுக்கு நடுவில் ரயில்களை பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும். அந்த ரயில் சென்னைக்கு எப்போது ஓடும் என்று ஏங்காத மக்கள் டெல்டாவில் யாருமே இல்லை.. வறண்டு கிடக்கும் போது, கரைபுரண்டு காவிரித்தாய் பொங்கி வந்தால் எப்படி இருக்கும்.. அப்படி ஒரு ஆனந்தத்தை ஆயுத பூஜை நாளில் சந்தித்திருக்கிறார்கள்.

ஆம்.. தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் புதிய ரயில் வந்துள்ளது. இன்று காலை ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு நடுவே சென்னையில் இருந்து வந்த ரயிலை வரவேற்று கொண்டாடி தீர்த்துள்ளார்கள் தஞ்சை மக்கள். இந்த பகல் நேர ரயில் திருச்சியில் புறப்படுகிறது. இது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த ரயிலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு திங்கள் மற்றும் வியாழன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே ஏற்கனவே உறுதி அளித்திருந்தது. இதன்படியே அக்டோபர் 11ஆம் தேதியான இன்று திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு ரயில் புறப்பட்டது.

இந்த ரயில் காலை 6.25 மணிக்கு தஞ்சாவூரை அடைந்தது. அதன்பின்னர் கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், திண்டிவனம், விழுப்புரம் வழியாக தாம்பரம் வந்து மதியம் 12.35 மணிக்குத் தாம்பரம் சென்றது. மீண்டும் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.35 மணி முதல் இரவு 10.15 மணிக்கு தஞ்சாவூருக்கும், இரவு 11.35 மணிக்கு திருச்சிக்கும் சென்றடைகிறது. இந்த ரயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
தஞ்சாவூர் வழியாக திருச்சி-பாலக்காடு ரயில் மற்றும் திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ், மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு தஞ்சாவூர் வழியாக வந்தே பாரத் ரயில், கம்பன் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தஞ்சை டெல்டா மக்களின் கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த கோரிக்கைளையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.













Click it and Unblock the Notifications