ஏற்றும் நேரத்தில் தொப்பென கீழே விழுந்த தேசிய கொடி.. கையை ஓங்கி அடிக்க பாய்ந்த திமுக எம்எல்ஏ! பரபர
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், அருகில் நின்ற ஊழியரை எல்லோர் முன்னிலையிலும் அடிக்கப் பாய்ந்தார்.
சுதாரித்துக் கொண்ட அந்த ஊழியர் கையை தேக்கி, கொடியை தாம் கொடிமரத்தில் கட்டவில்லை என்றும் வேறொருவர் கட்டியதாகவும் எடுத்துக்கூறி அடியிலிருந்து எஸ்கேப் ஆனார். இருப்பினும் பொதுவெளியில் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. தன்னை அடிக்க கை ஓங்கியதை அந்த ஊழியர் அவமானமாகவே கருதினார்.

சுதந்திர தினத்தை ஒட்டி கும்பகோணம் டவுன்ஹாலில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்துகொண்டார். கொடியை ஏற்றுவதற்காக கயிற்றை பிடித்து மேலே இழுத்த போது பறக்க வேண்டிய கொடி, கயிற்றிலிருந்து அறுபட்டு கீழே விழுந்தது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அன்பழகன் எம்.எல்.ஏ., கவனக்குறைவாக ஊழியர்கள் செயல்பட்டதை எண்ணி அவர்கள் மீது தனது கோபத்தை கொட்டினார். ஒரு கட்டத்தில் அடிக்கவும் கையை ஓங்கிவிட்டார். இதனிடையே ஒரு வழியாக கொடி அவசர அவசரமாக சரிசெய்யப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.
ஊடகங்கள் முன்னிலையில் கொடிகூட ஏற்றத் தெரியவில்லை என தன்னை திட்டமிட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாரேனும் கொடியை சரியாக கட்டாமல் விட்டிருந்தார்களா அல்லது யதேச்சையாக நடந்த நிகழ்வா என அன்பழகன் எம்.எல்.ஏ. தீர விசாரித்து வருகிறார்.
கும்பகோணத்தை போலவே தமிழ்நாட்டின் இன்னும் பல்வேறு இடங்களில் கொடியேற்று நிகழ்வின் போது இதேபோன்று களேபரங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications