சும்மா உட்காரு! 10 நிமிடத்தில் கூட்டத்தை கூட்டி காட்டவா? பாஜகவினருடன் மல்லுகட்டிய பழனிமாணிக்கம் MP
தஞ்சாவூர்: தஞ்சை ரயில் நிலையம் புனரமைப்பு பணிகள் தொடக்க விழாவில் பாஜகவினர் கூச்சல் போட்டதால், பழனிமாணிக்கம் எம்.பி. டென்ஷன் ஆனதோடு பஞ்ச் டயலாக்கும் அடித்தார்.
உட்காருங்க.. உட்காருங்க என பாஜகவினரை பொறுமையோடு கேட்டுக்கொண்ட பழனிமாணிக்கம் எம்.பி. ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி சும்மா உட்கார்றா, 10 நிமிடத்தில் நான் கூட்டத்தை கூட்டி காட்டவா என சவால் விடுத்தார். பாஜகவினர் தங்கள் சேட்டைகளை வேறு எங்கேயாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தன்னிடம் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் பழனிமாணிக்கம் எம்.பி.சூடானார்.

இதனால் பாஜகவினர் பழனிமாணிக்கத்துக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு கருப்பு முருகானந்தம் தலைமையில் தஞ்சை ரயில் நிலைய வாசலில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பேட்டியளித்த பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தம், பழனிமாணிக்கம் இதுவரை என்னென்ன சொத்து சேர்த்துள்ளார், என்னென்ன அராஜகம் செய்துள்ளார் என்ற விவரத்தை சேகரிப்பது தான் தனது முதல் பணி என்றார்.
மேலும், திமுகவினர் ஆயிரம் பேர் வந்தாலும் தாங்கள் 100 பேர் சமாளிப்போம் என்றும் சாவை கண்டு அஞ்சுபவர்கள் தாங்கள் இல்லை எனவும் கொதித்தார். இனி பழனிமாணிக்கம் எம்.பி. நிம்மதியாக தூங்க முடியாது என்றும் மத்திய அரசு நிகழ்ச்சியில் மத்திய அரசையே விமர்சிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என எகிறினார்.
இதனால் தஞ்சை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே யாரும் யாரையும் மிரட்டவில்லை என்றும் தனிப்பட்ட நபரை பற்றி தாம் எதுவும் பேசவில்லை எனவும் பழனிமாணிக்கம் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கல்யாண சுந்தரம், நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் காமெடியை போல் மிகவும் கூலாக டீ சாப்பிட்டுக்கொண்டே நடந்தவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications