எடப்பாடி எனக்கு ஜூனியர்.. அதிமுக வரலாறே தெரியாது.. வைத்திலிங்கம் சரமாரி அட்டாக்! சவாலை பாருங்க!
தஞ்சாவூர் : "நான் 2001-லேயே அமைச்சர், எடப்பாடி பழனிசாமி 2011ல் தான் அமைச்சர்; எனக்கு அவர் ஜூனியர் தான். எடப்பாடிக்கு அதிமுக வரலாறு தெரியாது" என விமர்சித்துள்ளார் வைத்திலிங்கம். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார் வைத்திலிங்கம்.
அதிமுக உட்கட்சி மோதல் வெடித்து ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பலர், ஓபிஎஸ் பக்கம் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கும், திமுகவுக்கும் பயணப்பட்ட நிலையில், ஒருசிலர் மட்டுமே ஓபிஎஸ்ஸுக்கு தோள் கொடுத்து வருகின்றனர். அவர்களில் முக்கியமாக, ஓபிஎஸ்ஸுக்கு வலது கையாக, தளகர்த்தராக உடன் நின்று களமாடி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.

இந்நிலையில் அண்மையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது. ஓபிஎஸ்ஸுடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் செல்லாதது குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்தார் வைத்திலிங்கம்.
இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. வைத்திலிங்கத்தின் கோட்டையான ஒரத்தநாட்டிற்கே சென்று அவரை கடுமையாக விளாசினார் எடப்பாடி பழனிசாமி. தைத்தொடர்ந்து, ஈபிஎஸ்ஸை சரமாரியாக விளாசி பதிலடி கொடுத்து வருகிறார் வைத்திலிங்கம்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், "அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து சட்ட விதி திருத்தங்களை ஏற்று தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது எப்போதும் நடப்பது. தேர்தல் ஆணைய முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனச் சொல்லப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்தால் எல்லாம் மாறும்.

நான் 2001-லயே அமைச்சர், எடப்பாடி பழனிசாமி 2011ல் தான் அமைச்சர்; எனக்கு அவர் ஜூனியர் தான். 1984ல் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. 1986ல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர். என்னைப் பற்றி நான் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும், ஒரத்தநாடு தொகுதிக்கும் ஒன்றும் செய்யவில்லை என எடப்பாடி சொல்லி இருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்திற்கு ஜெயலலிதாவிடம் நான் கேட்டதையெல்லாம் கொடுத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் யாருக்கும் வேலை கூட பெற்றுக்கொடுத்ததில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட வரலாறு தெரியாது. அதிமுக வரலாறு தெரியாது. தமிழ்நாட்டு அரசியலை, இந்திய அரசியலை, உலக அரசியலை என்னோடு விவாதிக்கத் தயாரா என்று கேட்டுச் சொல்லுங்கள்.
அதிமுக நாங்கள் தான். நாங்கள் ஒன்றிணைந்து கட்சியை நடத்துவோம். மீண்டும் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்பதற்காக நாங்கள் ஒற்றுமையாக இருக்க நினைக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி கட்சி அழிந்தாலும் பரவாயில்லை என சுயலாபத்திற்காக தலைமைப் பதவியில் இருக்க நினைக்கிறார். தேவை என்றால் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செயல்படுவோம்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications