4 நாள் விடுமுறை.. தஞ்சை ஆசிரியை கொலை நடந்த பள்ளியில் அன்பில் மகேஷ் விசாரித்த பின் அறிவிப்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் நுழைந்து அங்கு பணிபுரிந்த ஆசிரியை ரமணியை இன்று இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து பள்ளிக்கு சென்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து பள்ளிக்கு அடுத்த 4 நாட்கள் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிபட்டினம் எனும் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்காலிகமாக பயிற்சி ஆசிரியையாக ரமணி (வயது 26) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தமிழ் ஆசிரியை ஆவார்.

இந்நிலையில் தான் பள்ளியின் ஓய்வறையில் இன்று ரமணி இருந்தார். அப்போது திடீரென்று அங்கு சென்ற இளைஞர் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து ஆசிரியை ரமணியை குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ரமணி சரிந்து விழுந்தார். உடனடியாக சக ஆசிரியர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மதன் குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதன் குமார், ஆசிரியை ரமணியை காதலித்துள்ளார். இந்த பிரச்சனையில் தான் அவர் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது படுகொலை நிகழ்ந்த பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி ஆசிஷ் ராவத் அவர்களும் இருந்தனர் தொடர்ந்து.
உயிரிழந்த ஆசிரியை ரமணியின் உடலுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் கோவி.செழியன் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று சம்பவம் பற்றி விசாரித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அன்பில் மகேஷ் கூறியதாவது:
‛‛இப்படி ஒரு சம்பவம் பள்ளியில் நடக்கும்போது பிள்ளைகளுக்கு ஒரு பயம் என்பது வரும். அடிதடி நடந்தால் கூட மாணவர்கள் அங்கு செல்ல பயப்படுவார்கள். ஆனால் இப்படியான சம்பவம் நடந்த நிலையில் பிள்ளைகளின் பயத்தை போக்க இன்றும், நாளையும், நாளை மறுநாள் என்று இந்த வாரம் முழுவதும் விடுமுறை வழங்கி அறிவித்துள்ளேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications