அது மட்டும் நடக்கலைனா.. தஞ்சையில் பலர் பலியாகி இருப்பாங்க! நேரில் பார்த்தவரின் பதற வைக்கும் சாட்சி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அப்பர் கோவிலில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே இருந்த பொது மக்கள், இந்த சம்பவம் நடந்தது எப்படி? மின்சாரம் தாக்கியது எப்படி? என்று விளக்கி உள்ளனர்.
Recommended Video
தஞ்சாவூரில் இருக்கும் களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கடந்த 93 ஆண்டுகளாக இரவு நேரத்தில் நடப்பது வழக்கம். அதாவது இரவு 12 மணிக்கு பின் தேரோட்டம் தொடங்கி அதிகாலை வரை இந்த தேர் திருவிழா நடக்கும்.
மொத்தம் இந்த குருபூஜை 3 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த நிலையில்தான் நேற்று இரவு களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது.

என்ன நடந்தது?
இந்த நிலையில் அந்த தேர் தஞ்சாவூர் பூதலூர் சாலையில் களிமேடு பகுதி அருகே வரும் போது நெடுஞ்சாலையில் இருந்த உயர் மின் அழுத்த கம்பியில் உரசி உள்ளது. இந்த தேர் மின் கம்பியில் உரசிய நொடியில் அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதோடு தேரும் சட்டென தீ பற்றி உள்ளது. இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் தீயில் சிக்கி பலியானார்.

பலி
மொத்தம் 11 பேர் இதில் பலியாகி உள்ளனர். மின்சாரம் தாக்கியதில் பலருக்கு கை, கால் தனியாகி பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து காரில் தஞ்சாவூர் செல்கிறார்.

பேட்டி
இந்த நிலையில் தேர் தீ பிடித்ததை நேரில் பார்த்த மக்கள் பலர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். மின்சாரம் தாக்குவதற்கு முன்பும், பின்பும் என்ன நடந்தது என்று தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த தேரோட்டத்திற்காக எப்போதும் போல் மின்சார கம்பிகளை மக்களை உயர்த்தி உள்ளனர். சாலை ஓரம் இருக்கும் மின்சார கம்பிகள் தேரில் படாத வண்ணம் உயர்த்தி உள்ளனர். ஆனால் நெடுஞ்சாலையில் உள்ள மின்சார கம்பியை உயர்த்தவில்லை.

மின்சார கம்பி
இங்கு அடிக்கடி இப்படி தேரோட்டம் நடப்பது வழக்கம். ஒருமுறை கூட நெடுஞ்சாலை இருக்கும் பகுதியில் மின்கம்பிகள் உயர்த்தப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். ஒருமுறை கூட அங்கு இதனால் பிரச்சனை ஏற்பட்டது இல்லை. ஆனால் இந்த முறை தேரை திருப்பும் போது, அது சரியாக மின்சார வயரில் உரசி உள்ளது. இதுவே விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர்.

தண்ணீர் தேங்கியது
மேலும் தஞ்சையில் களிமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து இருக்கிறது. இதில் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தேரை இழுக்கும் போது மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இழுக்க முடியவில்லை. தண்ணீர் இல்லாத பக்கங்களில் இருந்தவர்கள் மட்டும் தேரின் வடத்தை பிடித்து இருந்துள்ளனர். சாலையில் தண்ணீர் இருக்கும் பகுதிகளில் இருந்த மக்கள்.. தேரை தொட முடியாமல் கொஞ்சம் தள்ளி நின்று உள்ளனர்.

மின்சாரம்
சரியாக மின்சாரம் தாக்கிய சம்பவம் நடப்பதற்கு முன்பும் அங்கு தேருக்கு அருகில் சில இடங்களில் சேறும், சகதியுமாக இருந்துள்ளது. இதனால் அதற்கு அருகில் இருந்தவர்கள் தேரை தொடாமல் கொஞ்சம் தள்ளி நின்றுள்ளனர். முன் பக்கம் இருந்த 25 பேர் மட்டுமே தேரை தொட்டபடி ஒட்டி இருந்துள்ளனர். இவர்கள்தான் மின்சாரம் தாக்கியதும் தூக்கி வீசப்பட்டு பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை
பின்பக்கம் அதிர்ஷ்டவசமாக தேரை தொடாமல் இருந்த 30 பேர் மின்சாரம் தாக்காமல் தப்பித்தனர். அந்த சேறு, தண்ணீர் மட்டும் அங்கே இல்லை என்றால் பலி எண்ணிக்கை 40 வரை கூட சென்று இருக்கும். மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். இதுவரை 93 வருடம் இந்த தேரோட்டம் நடந்த நிலையில் முதல்முறை இப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications