திமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்! தஞ்சை மாநகராட்சி ஆணையர் அதிரடி! எம்.எல்.ஏ. மருமகனுக்கே இந்த நிலை!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக கவுன்சிலர் அண்ணா.பிரகாஷ் என்பவரை தகுதி நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. நீலமேகத்தின் அக்கா மகனான அண்ணா பிரகாஷ் தஞ்சை மாநகராட்சியின் 16-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்தச் சூழலில் முதல் மாமன்றக் கூட்டத்தில் கூட பங்கேற்க முடியாத வகையில் அண்ணா.பிரகாஷிடம் இருந்து கவுன்சிலர் பதவி பறிக்கப்பட்டிருப்பது தஞ்சை மாவட்ட திமுகவில் பேசு பொருளாக உள்ளது.

தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சியில் திமுக சார்பில் 16-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் அண்ணா பிரகாஷ். இவர் தனது வேட்புமனுவில் பொய்யான தகவலை கூறியிருப்பதாகவும் தேர்தல் விதிமுறைக்கு மாறாக அண்ணா பிரகாஷின் உடன்பிறந்த தம்பி ராம் பிரசாத் அரசு மற்றும் மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வருபவர் எனவும் புகார் எழுந்தது. தேர்தல் விதிமுறைப்படி கவுன்சிலராக இருப்பவர்களோ அவரது ரத்த சொந்தங்களோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசு ஒப்பந்தப் பணிகளை எடுக்கக்கூடாது.

விதிமுறையை மீறி
ஆனால் இந்த விதிமுறையை மீறி அண்ணா பிரகாஷ் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகவும் ஆகிவிட்டார். ஆனால் அவர் மீதான புகார்களை அவரது எதிர்தரப்பினர் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையர் சரவணக்குமாருக்கு அனுப்பினர். இதையடுத்து புகார் உண்மை எனத் தெரியவந்ததால், திமுக கவுன்சிலர் அண்ணா பிரகாஷை தகுதி நீக்கம் செய்வதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆளுங்கட்சி கவுன்சிலர், திமுக எம்.எல்.ஏ. நீலமேகத்தின் அக்கா மகன் என பல பின்னணிகள் இருந்தும் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் துணிச்சலாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

மாநகராட்சி ஆணையர்
இதனிடையே தஞ்சை மாநகராட்சி ஆணையரின் இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் எனக் கூறியிருக்கிறார் கவுன்சிலர் பதவியை பறிகொடுத்த அண்ணா.பிரகாஷ். தானும், தனது தம்பியும் தனித்தனி வீட்டில் வசித்து வருவதாகவும் இது தொடர்பாக தமது தம்பி ராம் பிரசாத் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தும் அவர் அதை ஏற்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும், தனது தம்பியின் ஒப்பந்தப் பணிகளை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருக்கிறார்.

பிரச்சனை தீரவில்லை
தமிழகத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் தஞ்சாவூர் விவகாரம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. இதனிடையே ஆளுங்கட்சி கவுன்சிலருக்கே இந்த நிலை என்றால் நமக்கு எல்லாம் என்ன நிலை வரும் என இப்போதே தஞ்சை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications