தஞ்சை காவல் நிலையம் முன்பு உயிரைவிட்ட பெண் இன்ஜினியர்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை
தஞ்சை: தஞ்சை அருகே நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு பெண் இன்ஜினியர் கிருத்திகா தனது அண்ணனை காப்பாற்ற வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கிருத்திகாவின் உடலை 2-வது நாளாக வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த நடுக்காவேரியைச் சேர்ந்த அய்யாவு என்பவருடைய மகன் தினேஷ். இவருக்கு 32 வயது ஆகிறது. தினேஷ் அண்மையில் பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாக புகார் எழுந்தது. இதன் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற நடுக்காவேரி போலீசார், விசாரணைக்கு பின்னர் தினேஷை கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.

இதனால் மனமுடைந்த தினேஷின் தங்கைகளான மேனகா(31), இன்ஜினியரான கீர்த்திகா(29) ஆகியோர் தனது அண்ணன் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் ஆவேசமாக பேசினார்கள். தொடர்ந்து தனது அண்ணனை விடுவிக்குமாறு கூறி போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்தனர். அப்போது தங்களை அங்கிருந்த போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றம்சாட்டிய இரண்டு பேரும் பூச்சி மருந்தை குடித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நடுகாவேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிக்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கீர்த்திகா உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை அடுத்து கிருத்திகாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்தனர். சம்பவத்தில் தொடர்பாக தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வருவாய் கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ.) விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி கீர்த்திகாவின் உடலை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கீர்த்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தஞ்சை மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து பெண் இன்ஜினியர் பூச்சி மருந்து குடித்த விவகாரத்தை முறையாக கையாளாமல் விட்டதாக நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு பொறுப்பு வகிக்கும் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவரை இடமாற்றம் செய்து தஞ்சை டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா விசாரணை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தினேஷ் மீது பொய்யாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கீர்த்திகா அரசு பணிக்கு தயாரான நிலையில் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
