முஸ்லிம் வீட்டுக்குள் டக்னு நுழைந்த "சேகர் காலனி".. நாஞ்சிக்கோட்டை மசூதியில் யாரது? சபாஷ் தஞ்சாவூர்
தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் அனலடிக்கும் பிரச்சாரங்களுக்கு நடுவில், ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அந்தவகையில், நேற்றைய தினம் நடந்த 2 வகையான சம்பவம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கோவையில், ரம்ஜான் பண்டிகையானது, நேற்றைய தினம் மதநல்லிணக்க பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியாக மாறி, நெகிழ்ச்சியை தந்துவிட்டது. கோட்டைமேடு ஹவுசிங் யூனிட் மற்றும் கிரீன் கார்டன் குடியிருப்புவாசிகள் நல சங்கம் சார்பில் ரம்ஜானை முன்னிட்டு இரவு விடிய விடிய பிரியாணி சமைக்கப்பட்டது.

அண்டாவில் பிரியாணி: அங்கிருந்த குடியிருப்புவாசிகள் மொத்த பேரும் சேர்ந்து, மிகப்பெரிய அண்டாவில் விடிய விடிய பிரியாணியை சமைத்தார்கள்.. அந்த பகுதியில் வசித்த இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் என அனைத்து தரப்பினரும் இந்த மத நல்லிணக்க பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விடிகாலையில் தொழுகையை முடித்ததுமே, தயார் செய்யப்பட்ட இந்த பக்கெட் பிரியாணியை இஸ்லாமியர்களுக்கு வழங்கினார்கள்.. பிறகு, தூய்மை பணியாளர்களுக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது.
நல்லிணக்கம்: சாதி, மதம் பேதமின்றி, மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு இந்த பிரியாணி வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே பூரித்து போனார்.. இப்படியான மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோளையும் முன்வைத்தனர்..
அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.. இங்கே நாஞ்சிக்கோட்டை அருகே உள்ளது சேகர் காலனி.. இந்த பகுதியில் அலாவுதீன் என்பவர் வசித்து வந்தார்.. இவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. தீவிர சிகிச்சை அளித்தும் அலாவுதீனை காப்பாற்ற முடியவில்லை.. இதனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென அலாவுதீன் இறந்துவிட்டார்..
திடீர் வறுமை: அலாவுதீன் மட்டும்தான், அந்த குடும்பத்துக்காக சம்பாதித்து வந்தார்.. அவரை மட்டுமே நம்பியிருந்த குடும்பம், திடீரென வறுமையில் சிக்கிவிட்டது. குடும்பமே ஏழ்மையான சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டது.. இதனால், நேற்றைய தினம் ரம்ஜானைகூட அவர்களால் கொண்டாட முடியவில்லை.
அலாவுதீன் உயிருடன் இருந்தபோது, ஒவ்வொரு ரம்ஜானுக்கும் சேகர் காலனி மக்களுக்காக, பிரியாணி சமைத்து தருவாராம்.. தற்போது அவரது குடும்பத்தினரின் நிலைமையறிந்த சேகர் காலனி மக்கள், அலாவுதீனுக்காக, ஒன்று சேர்ந்தார்கள்... இத்தனைக்கும் சேகர் காலனி மக்கள் அனைவருமே இஸ்லாமியர் அல்லாதவர்களாம்.
அலாவுதீன்: இவர்கள் அனைவரும் சேர்ந்து, அலாவுதீன் குடும்பத்திலுள்ள அத்தனை உறுப்பினர்களுக்கும் புத்தாடைகளை வாங்கினார்கள்.. அரிசி, பருப்பு, இனிப்புகள் போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு, நேற்று ரம்ஜான் நாளில் கூட்டமாக அலாவுதீன் வீட்டுக்குள் நுழைந்தார்கள்..
அக்குடும்பத்தினருக்கு தாங்கள் கொண்டுவந்திருந்த பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார்கள்.. இதை பார்த்ததுமே நெகிழ்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடி போனது அலாவுதீன் குடும்பம்.. நேற்று முழுவதும் அலாவுதீன் குடும்பத்தினருடனே இணைந்து, சேகர் காலனி மக்களும் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
அன்பு: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும், சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதாபிமானமும், ஈரம் கசியும் இதயமும் இங்குள்ளவரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இதுபோன்ற "சகோதர உறவுகள்" பறைசாற்றி கொண்டிருக்கின்றன... மத மாற்றங்களை புறந்தள்ளிவிட்டு மனித மனங்களும் ஒன்றுபட்டு கொண்டிருக்கின்றன.. தழைத்தோங்கட்டும் மனித நேயம்..!!! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!!!












Click it and Unblock the Notifications