நூல் நூலாக தொங்குதே? பட்டுக்கோட்டை மீன் மார்க்கெட்டுக்கு போன ஆபீசர்ஸ்.. 167 கிலோ? ஆடிப்போன தஞ்சாவூர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மீன் மார்க்கெட்டில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணிவிட்டது.. எனினும், கடைசி நேரத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையானது, மீன்பிரியர்களுக்கு நிம்மதி உணர்வை தந்துள்ளது. என்னதான் நடந்தது?
சமீப காலமாகவே பிரபலமான ஓட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விநியோகிக்கப்பதாக புகார்கள் கிளம்புகின்றன.. எனவே, அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஓட்டல்கள் என்றில்லாமல், நடைபாதை உணவகங்களில், இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளில் என எங்கெங்கு புகார்கள் வருகிறதோ, அங்கெல்லாம் விரைந்து சென்று, சோதனை மேற்கொள்ளப்படுகிறது..
அதிகமாகும் புகார்கள்
ஒருவேளை, புகார்கள் உண்மையாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. எனினும், சரியான, சுகாதாரமான முறையில் உணவு விநியோகிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்தபடியே உள்ளது.
பெரும்பாலும் மீன் வகைகளில் இப்படியான குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்றன.. அளவுக்கு அதிகமான மருந்துகளை கலந்து, ஐஸ் பெட்டிகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுவதால், மீன்களை கவனத்துடன் வாங்க வேண்டும் என்று அதிகாரிகளும் அறிவுறுத்தியபடி உள்ளனர்.
சவக்கிடங்குகளின் மருந்து
கடலிலிருந்து பிடித்துவரப்பட்ட மீன்களை பதப்படுத்தினாலும், சில இடங்களில், மீன்களின் மீது ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பூசி விற்றுவிடுகிறார்களாம்.. அதாவது, சவக்கிடங்குகளில் மனித உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், துர்நாற்றம் வீசாமல் இருக்கவும் பயன்படுத்தப்படும் ஃபார்மலின் என்ற மருந்தைதான், மீன்களின் மீது சிலர் பூசுகிறார்கள். இதனால், மீன்கள் கெட்டுப்போய் பல நாள்கள் ஆகியிருந்தாலும் துர்நாற்றம் அடிக்காமல் இருக்குமாம்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சென்னை காசிமேட்டில் இப்படியொரு பிரச்சனை கிளம்பியது.. தாங்கள் பிடிக்கும் உள்ளூர் மீன்களுடன், தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட, வெளி மாநில மீன்கள் கலந்து விற்கப்படுவதாக, காசிமேடு சிறிய விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினார்கள்.
கெட்டுப்போன மீன்கள்
வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட மீன்களை, துறைமுகத்தில் தான் பிடிக்கப்பட்டது என்று ஏமாற்றி விற்பதுடன், இந்த கெட்டுப்போன மீன்களை பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாகவும் உணவுத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களே நேரடியாக புகார் தந்தனர்.
இதையடுத்து, உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள், காசிமேட்டில் ஒருநாள் முழுக்க சோதனையை மேற்கொண்டனர்.. இறுதியில் 350 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அவைகளை அழித்தனர்.
நிம்மதியில் பட்டுக்கோட்டை
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலும், அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக புகார் கிளம்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த புகாரையடுத்து, அங்குள்ள மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில், பட்டுக்கோட்டை மீன்வளத் துறை ஆய்வாளர்கள் வீரமணி, பிலிப்ஸ் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மார்க்கெட்டில் இருந்த 5 கடைகளில் சாப்பிட தகுதியற்ற, அழுகிய நிலையில் இருந்த 167 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவைகளை நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமானோர் இந்த மீன்களை வாங்கியிருக்க கூடும். ஆனால், நேற்றைய தினமே கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மீன் பிரியர்களுக்கு நிம்மதியை தந்தது.
தஞ்சை மார்க்கெட்டில் இருந்த 5 கடைகளில் சாப்பிட தகுதியற்ற, அழுகிய நிலையில் இருந்த 167 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவைகளை நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமானோர் இந்த மீன்களை வாங்கியிருக்க கூடும். ஆனால், நேற்றைய தினமே கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மீன் பிரியர்களுக்கு நிம்மதியை தந்தது.












Click it and Unblock the Notifications