பேராவூரணியில் பரிதாபம்...கிடா விருந்துக்கு வந்த இடத்தில் புது மணப்பெண் கொலை.. கணவன் தப்பி ஓட்டம்
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த வாட்டாத்திக்கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்- இவரது மனைவி காந்தி, பிரபாகரன் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் .
இதில் இரண்டாவது மகளான ஜோதி(19) என்பவரை பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மணிகண்ட பிரபு(35) என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தார்
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் மணிகண்டன் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஜோதி - மணிகண்டன் இருவரும் பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஜோதியின் உறவினரான, பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர்.

கிடா விருந்துக்கு வந்தனர்
அங்கு உள்ள பெருமாள் கோயிலில் இன்று சனிக்கிழமை அதிகாலை கிடா வெட்டு பூஜை நடந்துள்ளது. கிடா விருந்து தயாரான நிலையில் தம்பதியினர் காலை 10 மணி அளவில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதாக தெரிவித்து விட்டு வந்துள்ளனர். உறவினர்கள் உணவருந்த சீக்கிரம் வருமாறு தெரிவித்துள்ள நிலையில், மணிகண்டன் சிவன் கோயிலுக்குச் செல்லாமல் வேறு வழியே ஊமத்தநாடு ஏரிக்கரை வழியாக பேராவூரணி சென்றுள்ளார். ஜோதி கோயிலுக்கு செல்லாமல் எங்கு செல்கிறீர்கள்? எனக் கேட்டுள்ளார்.

படுகொலை
இந்த நிலையில்100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வெட்டி அடுக்கி வைத்திருந்த அங்கிருந்த கருவேல மரக்கட்டையை எடுத்து மணிகண்டன் ஜோதியின் தலையில் அடித்ததில் ஜோதி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின்பேரில் பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் ஒரு சைக்கோ
ஜோதியின் சடலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோதியின் தாயார் காந்தி கூறுகையில், "திருமணம் நடந்து மூன்று மாதமான நிலையில் மகளின்(ஜோதியின்) கணவர் மணிகண்டன் சைக்கோ போல் நடந்து கொள்வார். மகளின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி பிரச்சினை சசெய்து வந்தார். கூடுதல் நகை பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் எனது மகள் தெரிவித்தார். இது பற்றி போலீசாரிடம் கூறியுள்ளோம் என்று தெரிவித்தோம்.

போலீசார் விசாரணை
கொலை செய்துவிட்டு மணிகண்டன் தனது பைக்கில் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. கிடா விருந்துக்கு வந்த பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் சமைக்கப்பட்ட உணவு யாரும் சாப்பிடாமல் அப்படியே கிடக்கிறது. இன்று காலை கொலைச் சம்பவம் நடக்கும் வரை, கணவன்- மனைவி சிரித்து, சந்தோசமாக பேசிக் கொண்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். கொலையை மணிகண்டன் மட்டும் செய்தாரா? எதற்காக கொலை செய்தார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் பேராவூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications