பட்டுக்கோட்டை-தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரயில் பாதை.. ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா குட்நியூஸ்
தஞ்சை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு இந்த ஆண்டு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இது கடந்த ஆண்டை விட ரூ.300 கோடி கூடுதல் என்றும் மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கூறினார். தஞ்சை ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.12.37 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக கூறிய அமைச்சர், பட்டுக்கோட்டை-தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை திட்டம் குறித்த கேள்விக்கு அளித்த பதிலை பார்ப்போம்.
ரயில்வே துறையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிறைவேற்றிய மிகப்பெரிய திட்டம் என்றால் எழும்பூர்-கடற்கரை நான்குவழிப்பாதை, ராமேஸ்வரம் ரயில்வே மேம்பாலம், மதுரை-போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கல் பணி போன்ற பல்வேறு பணிகளை குறிப்பிட முடியும். அதேபோல் பல்வேறு ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் புதிய ரயில் பாதை அமைப்பு பணிகளை பொறுத்தவரை பெரிய முன்னேற்றங்கள் இல்லை.. இந்த ஆண்டு ரயில்வே, தமிழகத்திற்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய நீர்வளத்துறை மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் சோமண்ணா தஞ்சைக்கு நேற்று பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வருகை வந்தார். அப்போது திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன், முதன்மை திட்ட மேலாளர் நசீர் அகமது மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.
ரயில்வே துறை இணையமைச்சர் சோமண்ணா, தஞ்சை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் மத்திய மந்திரி சோமண்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரத்து 626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டை விட ரூ.300 கோடி கூடுதல் தொகையாகும்.தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 1,303 கி.மீ. தொலைவுக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்து 242 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கல் பணிகள் நடந்து முடிந்திருக்கிறது.
இதேபோல் தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 687 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகளை பொறுத்தவரை 94 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்திருக்கிறது வருகிற 2026-ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் பணிகள் முடிந்துவிடும். அதன்பிறகு முழுமையாக மின்சார என்ஜின்களில் ரயில்கள் ஓடும்.

தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான மாவட்டங்களில் ரூ.33 ஆயிரத்து 467 கோடிக்கு 22 ரயில்வே திட்டபணிகள் நடைபெற்று வருகிறது. அம்ரித் பாரத் திட்டத்தில் 77 ரயில் நிலையங்களில் ரூ.2 ஆயிரத்து 950 கோடிக்கு மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ.1,460 கோடியை மத்தியை அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள தஞ்சை ரயில் நிலையத்தை பொறுத்தவரை அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.12.37 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் இப்போது நடந்து வருகிறது. இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் பல்வேறு வகையான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பக்கத்தில் உள்ள புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரூ.13.50 கோடி மதிப்பிலும், காரைக்கால், மாகே ஆகிய புதுச்சேரி பிராந்தியத்திற்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் ரூ.109 கோடியிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளாவில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட மத்திய அரசு, அரசியல் செய்யாமல் நிறைய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பட்டுக்கோட்டை-தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்"இவ்வாறு ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கூறினார்.












Click it and Unblock the Notifications