சாப்பிட “வாடா”.. இது மரியாதை குறைந்த வார்த்தையில்ல! பலகாரத்தோட பேரு -செம டேஸ்ட்.. எங்க கிடைக்கும்?
தஞ்சாவூர்: சென்னை மண்ணடியில் உள்ள சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்களை சாப்பிட்டு பார்த்த யூடியூபர் இர்பான் "வாடா" என்ற ஒரு பலகாரத்தை சாப்பிட்டு இருப்பார். அதன் பூர்வீகம் என்ன? அதை தயாரிப்பது எப்படி? எது உண்மையான வாடா? என்று விரிவாக பார்ப்போம்.
கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த தமிழ் யூடியூபர்களும் போட்டிப்போட்டு சென்று வீடியோ பதிவு செய்துவரும் இடம் என்றால் அது சென்னை மண்ணடிதான். மண்ணடி என்றாலே குறுகல் நெடுகலான சந்துகள், கூட்ட நெரிசல் மட்டுமின்றி அங்கு கிடைக்கும் வகை வகையான உணவுகளும் நினைவுக்கு வரும்.

தமிழ்நாடு இல்ல.. இந்தியா இல்ல.. உலகத்திலேயே இல்லாத வித்தியாசமான உணவு வகைகளை அங்கு பார்க்க முடியும். குறைந்த விலையில் பல உணவு வகைகளை அங்கு ருசிக்கலாம். குறிப்பாக இந்த ரமலான் மாதத்தில் இஃப்தார் நோன்பு திறப்புக்காக அங்குள்ள அங்கப்ப நாயக்கன் தெருவில் ஏராளமான சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு விதவிதமான உணவுகள் விற்கப்பட்டு வருகின்றன.
இதனை வீடியோ எடுத்து வெளியிடுவதற்காகவே நோன்பு தொடங்கியதில் இருந்தே ஏராளமான யூடியூபர்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். இதை முதலில் தொடங்கி வைத்தவர் யூடியூபர் இர்பான்தான். அங்கு சென்று விதவிதமான உணவுகளை சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், அவர் வாங்கி சாப்பிட்ட ஒரு பலகாரம்தான் வாடா.
வாடாவா? வடையா? ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்துவிட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். அதன் பெயர் உண்மையிலேயே வாடாதான். ஆனால், இர்பான் மண்ணடியில் வாங்கி சாப்பிட்டது வாடா தானா? என்று கேட்டால், இல்லை என்று உறக்க சொல்வார்கள், அந்த உணவின் பூர்வீகமான தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள். இர்பான் சாப்பிட்ட அந்த வாடா சொல்லிக்கொள்ளும்படி சுவையாக இல்லை என்று பேசி இருப்பார். ஏனென்றால் அது வாடாவே இல்லை.

சுவையில் மட்டுமல்ல, வடிவத்திலும் அது வாடா போன்று இல்லை. தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோர பகுதியில் அமைந்திருக்கும் அதிராம்பட்டினம் நகராட்சிதான் வாடாவின் பூர்வீகம் என்று சொல்லப்படுகிறது. இல்லை.. இல்லை.. எங்கள் ஊரில்தான் இறால் வாடாவை கண்டுபிடித்தார்கள் என்று நாகூரை சேர்ந்தவர்களும் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். காயல்பட்டினம், கீழக்கரை போன்ற ஈசிஆர் சாலையை ஒட்டி அமைந்து இருக்கும் கடலோர பகுதிகளை சேர்ந்தவர்களும் இதற்கு உரிமைகோருவது உண்டு.
அதற்கு காரணம் இந்த 4 ஊர்களுக்கும் வரலாற்று ரீதியான உறவும், கலாச்சார, மொழி ஒற்றுமையும் உள்ளது. 4 ஊர்களுக்கு இடையே திருமண உறவும் இருக்கின்றன. சரி நாகூரில் உள்ள வாடா எப்படி இருக்கிறது? என்று அறிய அங்குள்ள கடற்கரைக்கு சென்றோம். ஒரு பெண் அதை தயாரித்து விற்றுக்கொண்டு இருந்தார். அதை வாங்கி ஒரு கடி கடித்தபோது, என்ன உள்ள ஒன்னுமே இல்ல என்று தோன்றியது. மாவுக்கு நடுவில் வைக்கப்படும் தேங்காய், வெங்காய மசாலா எங்கே என்று கேட்டபோது, இதான்பா நாகூர் வாடா.. நாகூர் வாடாவில் எதுவுமே இருக்காது என்றார். அப்படியே ஒரு நொடி ஷாக் ஆகிவிட்டோம்.
ஆனால், அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் + வெங்காய மசாலா இல்லாமல் வாடா இருக்காது. இதை உள்ளடம் என்று சொல்வார்கள். எது எப்படியோ, டெல்டாவை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை ஓரங்களில் வாழும் மக்கள் மத்தியில் இது நன்கு பரிட்சையமான உணவாகவே உள்ளது. குறிப்பாக ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சியில் இந்த வாடாவை முக்கி எடுத்து ஒரு கடி கடித்துவிட்டு அப்படியே கஞ்சியை குடிப்பதன் ருசியை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.
மாலை நேரங்களில் தேனீருடன் ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்றால் அதிராம்பட்டினத்தில் இந்த வாடாதான் முதல் சாய்ஸாக இருக்கிறது. வீட்டுக்கு மாலை நேரத்தில் வரும் விருந்தாளிகளுக்கும் தட்டு நிறைய வாடாவை அடுக்கி வைத்து உபசரிப்பார்கள். வெளியில் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும்போதும் வாடாவை வாங்கி செல்வார்கள். அதற்கு அடுத்தடுத்த இடத்தில்தான் சம்சா, வடை போன்றவை உள்ளன.

ஆனால், தேனீர் கடைகளில் இந்த வாடா கிடைக்காது. ஆங்காங்கே பெண்கள் வாடா கடை போடுவார்கள். வீடுகளில் தயாரித்து விற்பார்கள். ரமலான் மாதத்தில் இது அதிகளவில் விற்பனையாகும் என்பதால் பல இடங்களில் வாடா கடைகள் ஒரு மாதத்திற்கு மட்டும் அமைக்கப்படும். மசூதிகளில் நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சிகளிலும் இந்த வாடாவே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. சிலர் இறால் வைக்காமல் வெஜிடேரியன் வாடா செய்வார்கள். வாடா மேலே உப்பு போட்டு கருக்கிய இறாலை வைத்தால் அது அசைவமாகிவிடும்.
புளிக்க வைத்த அரிசிமாவை எடுத்து அதை ஒரு சிறிய துணியில் தட்டையாக தட்டி, அதன் மேல் உள்ளடம் வைத்து அதன் மேல் மீண்டும் அரசி மாவை தட்டி வைத்து அதன் மேல் இறாலை வைத்து, துணியை பிடித்து எண்ணெய் சட்டியில் பொறித்து எடுப்பதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பொறித்து எடுத்தவுடன் தட்டில் வைக்கப்பட்டும் வாடாவின் நிறமும், மனமும், 'என்னை சாப்பிட வாடா..' என்று அழைப்பதைபோல் இருக்கும். உள்ளங்கை அளவில் இருக்கும் ஒரு வாடாவின் விலை அதிராம்பட்டினத்தில் 10 ரூபாய்க்கும் குறைவுதான். சாப்பிட்டால் மன நிறைவுதான்.
மதுரைக்கு ஜிகர்தண்டா போல் உங்கள் ஊரில் என்ன ஸ்பெஷல் என்று யாராவது கேட்டால் வாடா என்று சொல்வார்கள் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மனோரா அல்லது அதை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையோர பகுதிகளில் மாலை நேரத்தில் பயணித்தால் தவறாமல் நீங்கள் சாப்பிட வேண்டிய பலகாரம் இந்த வாடா. இதை சாப்பிடலாம் வாடா! என்று உங்கள் நண்பர்களையும் அழைத்து செல்லலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications