அடிமடியிலேயே வேட்டு.. ஓபிஎஸ் சொந்த ஊரிலேயே 'ஷாக்' கொடுத்த எடப்பாடி டீம்.. தீர்ப்புக்காக ‘அரோகரா’ !
தேனி : அதிமுகவில் தனது தலைமைப் பதவியை தக்கவைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அவரது சொந்த ஊரிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வர வேண்டி அதிமுக நிர்வாகிகள் வேண்டுதல், பாதயாத்திரை தீவிரமாக களமிறங்கி இருப்பது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் நடைபெற்றது.
இதில், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர். வரும் 16-ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஈபிஎஸ் வர வேண்டும் என்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சுரேஷ் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

எடப்பாடிக்காக வேண்டுதல்
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராகவும் அடுத்த முதல்வராகவும் வேண்டி தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் சுரேஷ், பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளார். இவர், நேற்று பெரியகுளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்டார். அவருக்கு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பெரியவீரன், அதிமுக நகர பொறுப்பாளர் பழனியப்பன், வழக்கறிஞர் தவமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

ஓபிஎஸ் சொந்த ஊரில் இருந்து
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வர வேண்டி கடந்த 40 நாட்களாக விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றிருப்பது அப்பபகுதி அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உண்மைத் தொண்டர்கள்
எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக முழுமையாகச் செல்லவேண்டி பாதயாத்திரை செல்லும் சுரேஷ் பேசுகையில், "நான் அதிமுகவின் உண்மை தொண்டனாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக வேண்டி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பாதயாத்திரை செல்கிறேன். கடைக்கோடி தொண்டனாக இருக்கும் என்னைப் போன்ற அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

சாதகமான தீர்ப்பு
மேலும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ள வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து கட்சி வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அடுத்து வருகின்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அதிக அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் விரதம் இருந்து தற்போது பாதையாத்திரை மேற்கொண்டு உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சொந்த ஊரில் மோதல்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, இருவரும், தத்தம் அணியை பலப்படுத்த நிர்வாகிகள், தொண்டர்களை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அந்தவகையில், ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறினர். இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் ஏரியாவான பெரியகுளத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வர வேண்டி அதிமுகவினர் பாதயாத்திரை மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications