முல்லை பெரியாற்றங்கரையில்! இளையராஜாவுக்கு பெரும் சோகம்! பவதாரிணியின் உடல் நல்லடக்கம் எங்கு தெரியுமா?
தேனி: இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் எங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது தெரியுமா?
இளையராஜாவின் செல்ல மகள் பவதாரணி (47). இவர் ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, அழகி, காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

பவதாரணி மயில் போல பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பிலும் பவதாரணி பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு 3 திரைப்படங்களுக்கு பவதாரணி இசையமைத்து வந்தார். 6 மாதங்களாக உடல் நல பிரச்சினையில் இருந்தார் பவதாரணி. இவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜனவரி 27, 28 இலங்கையில் நடைபெற இருந்தது. இளையராஜா தலைமையில் இலங்கைக்கு இசை குழுவினர் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் பவதாரிணி கடந்த 25ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் 26ஆம் தேதி மாலை இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பவதாரிணியின் உடல் தனது தந்தையின் திநகர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரது உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பண்ணைபுரத்தில் குடும்ப சடங்குகள் நடத்தப்பட்டு பவதாரிணியின் உடல் முல்லை பெரியாற்றங்கரையில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது மகள் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு இளையராஜா பாட்டு பாடினார்.
மயில் போல பொண்ணு ஒண்ணு என அவர் பாடிய போது அங்கிருந்தவர்கள் மனம் வெம்பினர். பவதாரிணியின் உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாயி, மனைவி ஜீவா ஆகியோர் இருந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணிக்கு புற்றுநோய் இருந்தது கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் அதிகபட்சம் 2 ஆண்டுகள்தான் உயிரோடு இருப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கும் முன்பே அவர் காலமானது அவருடைய குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பவதாரிணியின் பித்தப்பையில் கல் இருந்ததாக சொல்லப்பட்டது. அது நாளடைவில் புற்றுநோயாக மாறியிருக்கலாம் என தெரிகிறது. அந்த புற்றுநோய் கல்லீரல், கணையம், நுரையீரல் என 85 சதவீதம் அளவுக்கு உடலில் பரவிவிட்டது.












Click it and Unblock the Notifications