தேனி மாவட்டத்தில் தேச விரோதிகள் ஊடுருவல் .. பரபரப்பாக எஸ்பி ஆபீசுக்கு ஓடிய பாஜக தலைவர்
தேனி: காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு சிலர் மத்திய அரசிற்கும், ராணுவத்திற்கும் எதிராக சமூக வலைதளங்களில் தேச விரோத கருத்துக்களை பதிவிட்டு வருவதாக தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்தை சந்தித்து புகார் அளித்தனர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர், சிலர் மத்திய அரசிற்கும் ராணுவத்திற்கும் எதிராக சமூக வலைதளங்களில் தேச விரோத கருத்துக்களை பதிவிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

தேனி மாவட்டத்தில் இதுபோன்று மத்திய அரசிற்கு எதிராக தேச விரோத கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது தேச துரோக வழக்கின் கீழ் மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி தலைமையில் பாஜக நிர்வாகிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
தேனி மாவட்டத்தில் தேச விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட தேனி மாவட்ட பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது அவர்கள் குறித்து மாவட்ட காவல்துறை தொடர்ந்து கண்காணித்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் ராஜ பாண்டி கோரிக்கை வைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக வாரந்தோறும் எதிர்ப்புகள் நடைபெற்று வருகிறது என்றும் இதனால் தேனி மாவட்டத்தில் பயங்கரவாதிகள், தேச விரோதிகள் ஊடுருவல் அதிகமாக இருப்பதாக அச்சம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. தேச விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை தேனி மாவட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த காலங்களில் கைது செய்துள்ளது. எனவே காவல்துறை சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications