டெல்லியில் பேச்சையே காணோமே.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி அலுவலகம் முற்றுகை.. தேனியில் பரபரப்பு!
ரவீந்திரநாத் எம்.பி.யின் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
தேனி : அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பாத தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கேஸ் சிலிண்டர்களை தூக்கிக் கொண்டு பேரணி நடத்தினர்.

தொடர் விலை உயர்வு
காங்கிரஸ் ஆட்சியில் 2014 வாக்கில் ரூ. 400 அளவில் இருந்த கேஸ் சிலிண்டர் விலை தற்போது 1,100-ஐக் கடந்துள்ளது. மத்திய பாஜக தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் தொடர்ச்சியாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தேனி எம்.பி அலுவலகம் முற்றுகை
இந்நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை உயர்ர்வைக் கண்டித்தும் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் எழுப்பாத தேனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் பேரணி
முன்னதாக வைகை அணைச்சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன் இருந்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டிக்கும் விதமாகவும், சமையல் எரிவாயு சிலிண்டரை தோளில் சுமந்தவாறு காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர்.

கைது
பெரியகுளத்தில் உள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக ரவீந்திரநாத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பெண்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் தேனி- திண்டுக்கல் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications