ஓபிஎஸ் ஊருக்குள்.. போலீஸையே தாக்கி கலவரம்.. இதுதான் விடியல் ஆட்சியா.. வரிந்துக் கட்டி வந்த எடப்பாடி
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில், அம்பேத்கர் பிறந்த நாள் ஊர்வலத்தின்போது ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பகுதியச் சேர்ந்தவர்களிடையே கலவரம் நடந்தது. இதில் காவலர்கள் தாக்கப்பட்டதுடன், காவல் நிலையம், ஆம்புலன்ஸ்,வாகனங்கள், பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாலையில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பகுதியை சேர்ந்தவர்கள் ஊர்வலம் வந்தனர்.

இந்த ஊர்வலத்தின் போது இரு பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். இரவில் ஊர்வலம் முடிந்து அதில் பங்கேற்றவர்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.
பெரியகுளம் வடகரை போலீஸ் காவல் நிலையம் வழியாக சென்ற சிலர் திடீரென காவல் நிலையம் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கற்கள் போலீஸ் நிலையத்துக்குள் சரமாரியாக விழுந்தன. அதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல் ஆய்வாளரின் ஜீப் கண்ணாடி உடைந்து சிதறியது.

வெளியில் ஓடிவந்த காவலர்கள் என்ன நடந்தது என்று பார்ப்பதற்குள் அவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். மேலும், அங்கு நின்ற 108 ஆம்புலன்ஸும் கல்வீச்சுக்குள்ளானது. அதன் கண்ணாடியும் உடைந்து சேதம் அடைந்தது. இதையடுத்து ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்கள். அதற்குள் கல்வீச்சில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அதுபோல், பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் சென்ற அரசு பஸ் மீதும் சிலர் கல்வீசி தாக்கினர். அதில் பஸ் கண்ணாடி உடைந்தது.

அடுத்தடுத்து கல்வீச்சு சம்பவத்தால் பெரியகுளம் பகுதியில் பெரும் பதற்றம் உருவானது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே விரைந்து வந்து பார்வையிட்டார். இந்நிலையில் கல்வீச்சில் ஈடுபட்டதாக சிலரை போலீசார் துரத்திப் பிடித்தார்கள். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "பெரியகுளத்தில் இரு தரப்பினர் இடையேயான மோதலால் ஒரு பெண் ஆய்வாளர் உட்பட 8 காவலர்கள் தாக்கப்பட்டு,காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்,வாகனங்கள் உட்பட காவல்நிலையமே முழுமையாக தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இதனால் தேனி மாவட்டம் முழுவதிலும் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது

இந்த விடியா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமாறி,இன்று காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகி இருக்கிறது. எந்தவித அச்சமுமின்றி காவல்நிலையத்தின் மீதே நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதற்கான மிகப்பெரிய சாட்சியம். இனி இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்து ,தமிழகத்தில் பொது அமைதியை காக்க மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசை மீண்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications