செங்கோட்டையன் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக ஓபிஎஸ் சொன்ன மெசேஜ்
தேனி: பல்வேறு பிரச்சனைகள் அதிமுக இயக்கத்திற்கு வந்த போது ஒரே நிலையில் இருந்து பாடுபட்டவர் செங்கோட்டையன். அதிமுகவில் பிறந்துச் சென்ற தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என்ற அவரின் மனதின் குரலை வெளிப்படுத்தி இருக்கிறார். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேறுவதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என ஓ பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், " ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தது. இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் அமைதியாக இருந்தேன். இயக்கதிற்காக பல தியாகங்களை செய்தேன். தன்னை விமர்சித்தவர்களை அரவணைத்துச் சென்று கட்சியை உறுதியாக வழிநடத்தியவர் ஜெயலலிதா.

2017-ல் ஆட்சி அமைந்த பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற, 2023 உள்ளாட்சித் தேர்தலில் கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோருடன் நானும் இணைந்து கட்சியின் பொதுச் செயலாளரை (எடப்பாடி பழனிசாமியை) சந்தித்தோம். பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், அதனை ஏற்கும் மனநிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) இல்லை.
2010-ல் தேர்தல் களத்தில் கழகம் பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், கோவை குலுங்கியது, மதுரை நடுங்கியது, திருச்சி திரும்பியது என்று சொல்லும் அளவுக்கு மாநாட்டிற்கு கூட்டம் வந்தது. இருந்தபோதும் தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்து ஜெயலலிதா வெற்றிபெற்றார். 2016லும் அப்படித்தான் வெற்றிபெற்றார். வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், எந்தத் தியாகத்தையும் செய்து பணியாற்றுகிறோம் என்று சொல்கிறார்கள்,.
யாரை இணைப்பது என்பதை பொதுச் செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) முடிவு செய்யலாம். நான் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு 10 நாட்கள் என்ற காலக்கெடுவும் இருக்கிறது. அது நிறைவேற்றப்படவில்லை என்றால், ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து முடிவெடுப்போம்" இவ்வாறு செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்நிலையில் வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, "அதிமுக இயக்கத்தை எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டவர் செங்கோட்டையன். பல்வேறு பிரச்சனைகள் இந்த இயக்கத்திற்கு வந்த போது ஒரே நிலையில் இருந்து பாடுபட்டவர் செங்கோட்டையன்.
அதிமுகவில் பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என்ற செங்கோட்டையன் மனதின் குரலை வெளிப்படுத்தி இருக்கிறார். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேறுவதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என ஓ பன்னீர்செல்வம் கூறினார்.
நாங்களும் அதற்காக தான் போராடி கொண்டிருக்கிறோம். எந்த தேர்தலையும் வெற்றி பெற முடியாத நிலை இருக்கிறது. அது மாற வேண்டும் என்றால் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக தொண்டர்களின் இயக்கம், இதில் தொண்டர்கள் யாரையும் வெளியேற்ற முடியாது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications