மதுரை-போடிநாயக்கனூர் ரயில் பாதையில்.. சின்னதாய் ஒரு உத்தரவு.. 40 நிமிட பயண நேரம் குறையும்

Subscribe to Oneindia Tamil

தேனி: மதுரை-போடிநாயக்கனூர் ரயில் பாதை மின்மயமாக்கல் பணி முடிந்துவிட்ட நிலையில், மின்சார இன்ஜின் ரயில்களை இயக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ரயில் இன்ஜினை மாற்றாமல் இயக்கினால்.. மதுரையில் ரயில் 40 நிமிடம் வரை தேவையின்றி நிற்பது குறையும் என்றும், தேனி மற்றும் போடிநாயக்கனூருக்கு பயணிகள் விரைவாக செல்ல முடியும் என்றும் தெரிவித்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளாவின் இடுக்கி மாவட்ட பகுதிகளில் விளையும் ஏலக்காய், மிளகு, காபி உள்ளிட்ட பொருட்களை வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 1909-ல் மீட்டர் மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வரை மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை மற்றும் போடிநாயக்கனூர் இடையே சுமார் 87 கிலோ மீட்டருக்கான ரயில் சேவை தொடங்கியது. கடந்த 2000க்கு பிறகு நாடு முழுவதும் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டது. அதன்படி 2010 டிசம்பர் முதல் மதுரை -போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்தது. 2011ம் ஆண்டு தண்டவாளம் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை பணி தொடங்கியது. இருப்பினும் பல ஆண்டுகளாக ரயில் பாதை அமைக்கும் பணி மெதுவாக நடந்து வந்தது.

theni madurai train

ஒரு வழியாக கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன. இதனால் 12 ஆண்டுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை- தேனி வரையிலான ரயில் சேவையை கடந்த ஆண்டு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன்பின்னர் போடிநாயக்கனூர் வரையிலான பணிகளும் முடிந்தன. கடந்த ஆண்டு ஜூன் 15 முதல் மதுரை- போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதையில் ரயில்கள் ஓடத்தொடங்கியது. சென்னை- மதுரை துரந்தோ ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ரயில் தற்போது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு புறப்படுகின்றன.

இதனிடையே அகல ரயில் பாதை முடிந்த கையோடு, மதுரை - போடிநாயக்கனூர் இடையே உள்ள 87 கி.மீ. நீளத்திற்கு மின்மயமாக்கும் பணி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது மின் கம்பம் நடும் பணிகள் மற்றும் மின்சார வயர்கள் இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. இதேபோல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் மின்மயமாக்கல் பணிகள் தீவிரமாக நடந்து முடிந்தது. இதுதவிர தேனியில் உள்ள சரக்கு நிலைய ரயில்பாதை ஆகியவற்றிலும் மின்மயமாக்கல் பணிகள் தொடர்ந்து நடந்து முடிந்தன.

மின்மயமாக்கல் பணிகள் முடிந்த காரணத்தால் மதுரை - போடிநாயக்கனூர் ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைக்கான இறுதிகட்ட சோதனை ஓட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நடந்தது. 140 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. ஆனால் இதற்கிடையே ரூ.80 கோடி மதிப்பீட்டில் மதுரை-போடி பாதையை மின்மயமாக்கும் பணி முடிந்து சோதனை ஓட்டமும் முடிந்து சுமார் 20 நாட்கள் ஆகும் நிலையில், மின்சார இன்ஜின் மூலம் இதுவரை ரயில்கள் இயக்கப்படவில்லை.

சென்னையில் இருந்து போடிநாயக்கனூர் வரும் ரயில் அதிகாலை 5.40 மணிக்கு திண்டுக்கல் நிலையத்தை வந்தடைகிறது. மதுரைக்கு அந்த காலை 7 மணிக்கு வருகிறது. அதன்பிறகு மதுரையில் இருந்து மின்சார என்ஜின் பிரிக்கப்பட்டு, டீசல் இன்ஜின் ரயிலில் பொருத்தப்படுகிறது. இதற்கு சுமார் 40 நிமிடத்துக்கு மேல் ஆகி வருகிறது.அதன்பிறகு மதுரையில் இருந்து புறப்பட்டு தேனிக்கு காலை 9 மணிக்கு வருவதால், தேனி மாவட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதுரை ரயில் நிலையத்தில் தேவையின்றி காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், பயணிகள் திண்டுக்கல் ரயில் நிலையத்திலேயே இறங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அங்கிருந்து தேனி, போடிக்கு பஸ் மூலம் செல்கிறார்கள். ஏனெனில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 5.40க்கு வந்து இறங்கிய உடன் ரயில் ஏறினால், பேருந்து நிலையம் வந்து, பேருந்துகளில் 7.30 மணி முதல் காலை 8 மணிக்கு எல்லாம் தேனிக்கு போய்விட முடியும். ரயில் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பே தேனி அல்லது போடிக்கு போக முடியும். இதனால் தேவையின்றி பயணிகள் பேருந்துகளில் செல்லும் நிலை இருக்கிறது.

மதுரை போடிநாயக்கனூர் இடையே ரயில்பாதை மின்மயமாகி உள்ளதால், மின்சார என்ஜினிலேயே இயக்க தெற்கு ரயில்வே உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தேனி மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மின்சார ரயில்கள் இயக்க முடியும் என்பதால் கூடுதலாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்றும், போடிநாயக்கனூர்-மதுரை தூரந்திரோ ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+