கேட்பாரற்று கிடக்குது கிராமங்கள்.. ஜெயிலுக்கு போக போறார் எடப்பாடி.. ஸ்டாலின் ஆவேசம்
தேனி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தேனி: "ஒரு கொலையை மறைக்க 4 கொலைகள் நடந்திருக்கு.. ஊழல் செய்துவிட்டு சிறைக்கு போவது ஒரு விதம்.. ஆனால் கொலை செய்துவிட்டு சிறைக்கு போகும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்க போகிறார்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் வடபுதுபட்டியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
"கிராமங்கள் கேட்பாரற்று கிடக்கிறது. அழகாபுரி கிராமத்திலிருந்து பேசிய பெண்கள், அரசு பஸ் வசதி இல்லை, கழிப்பிட வசதி இல்லை என்றார்கள்.

பஸ் வசதி இல்லை
அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேசும்போது, கிராம பெண்கள் கழிப்பிட வசதி இல்லாமல் சிரமப்படுவதாக கூறினார். அம்மாபுரம் கிராம பெண்கள் கூறும் போது, பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை என்றும், 2 கிலோமீட்டர் நடத்து வடபுதுபட்டிக்கு வந்து தான் பஸ் ஏறுவதாகவும் கூறினர்.

திமுக ஆட்சி
தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வந்துவிடாதா என்று மக்கள் ஏக்கத்தோடு இருக்கிறார்கள். மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, மக்களுக்கு திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

ஜெ., மரணம் மர்மம்
முதல்வராக இருந்தபோது தான் அண்ணா மறைந்தார். 2 மாதம் மருத்துவமனையில் இருந்தார். ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலை பற்றி செய்தி சொல்வோம். காலையில் ஒருமுறை, மாலை ஒருமுறை. அதே போல் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது செய்தி சொல்லியிருக்க வேண்டுமா அல்லவா? பதவி கிடைக்கும் வரை ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்றார் ஓ.பி.எஸ்.! பதவி கிடைத்ததும் ஜெயலலிதா மரணத்தை பற்றி பேசவில்லை.

சிறை செல்வார்
ஒரு கொலை நடந்தது. அதனை மறைக்க நான்கு கொலைகள் நடந்திருக்கின்றன. யார் யார் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களே வந்து பேசுகிறார்கள். ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்வது ஒரு விதம். கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கப் போகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துவிடுவோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
