அன்று தேனி தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் சேர முட்டுக்கட்டை போட்ட ஓபிஎஸ்.. இன்று அப்படியே மாறிய காட்சி
தேனி: தேனி எம்பி தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் சேர முடியாமல் போக ஓ பன்னீர்செல்வம் தான் ஒரு காலத்தில் காரணமாக இருந்தார்..இன்று அவருடனேயே சேர்ந்து அரசியல் செய்ய போகிறார். தமிழக அரசியலின் மிக சுவாரஸ்யமான மற்றும் முரண்பாடான ஒரு திருப்பமாக இது பார்ககப்படுகிறது. அரசியல் சதுரங்கத்தில் "நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை" என்பதற்கு இவர்களின் உறவு ஒரு சிறந்த உதாரணம் என்று கூறலாம்.. என்ன தான் இருவருமே அதிமுகவில் சேர முடியாத நிலை வந்தபோதும், திமுக தான் கைகொடுத்துள்ளது. இருவரையும் திமுகவில் இணைத்திருப்பது ஸ்டாலின்.
தேனி மாவட்டம் என்பது ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. அதில் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக 2ம் நம்பர் என்கிற அளவில் இருந்தார் ஓ பன்னீர்செல்வம்.. ஆனால் அவருக்கு கடும் சவாலாக விளங்கியவர் தங்க தமிழ்செல்வன். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு டி.டி.வி தினகரன் பக்கம் சென்றார் தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ்-ஐ மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதிமுகவில் சேர முட்டுக்கட்டை
டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகியபோது, தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைய விரும்பினார். ஆனால், அப்போது கட்சியில் செல்வாக்குடன் இருந்த ஓபிஎஸ், தனது அரசியல் எதிர்காலத்தைக் கருதி அவரை உள்ளே விடாமல் தடுத்தார் என்பது ஊரறிந்த ரகசியம். இதன் காரணமாகவே அவர் திமுகவில் சேர வேண்டிய சூழல் உருவாகியது.. எனினும் திமுகவில் சேர விரும்பிய தங்க தமிழ்செல்வனை ஸ்டாலின் அரவணைத்தார்.
இன்றைய அரசியல் சூழல்
இன்று அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் மோதல் நடந்து வந்தது. கடைசி வரை எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க விரும்பவில்லை.. இதனால் பாஜகவும் அவரை அதிமுகவில் சேர வைக்க செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எல்லாம் கை மீறி போன நிலையில்,வேறுவழியின்றி, திமுகவில் இணை ஓ பன்னீசெல்வம் முடிவு செய்து சேர்ந்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் மகன் ரவீந்திரநாத்துடன் இணைந்து திமுகவில் இணைந்துள்ளார்.
இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி எம்பி-யாக வென்ற தங்க தமிழ்செல்வன் (திமுக), தற்போது ஓபிஎஸ்-ஐ ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போடி தொகுதியில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வனை ஆதரித்து பேச வேண்டியநிலைக்கு ஓ பன்னீர்செல்வமும் தள்ளப்பட்டுள்ளார்.

"ஒன்றாகச் சேர்ந்து அரசியல்"
தற்போதுள்ள அரசியல் சூழலில், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், ஒருகாலத்தில் எதிரும் புதிருமாக இருந்த ஓபிஎஸ் மற்றும் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் இப்போது ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "நேற்று எதிர்த்தவர் இன்று நண்பர்" என்பது தேனி அரசியலில் இப்போது நிதர்சனமாகி உள்ளது.
அண்மைக் காலமாக, ஓபிஎஸ் திமுக அரசுக்கு எதிராக பெரிய விமர்சனங்களை வைக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடித்து வந்தார். இப்போது பகிரங்கமாக இணைந்துள்ளார். தேனியில் செல்வாக்காக இருந்த ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பதை திமுகவினர் பலமாக பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications