இப்படியும் மோசடியா? தேனியில் செல்போன் கடை உரிமையாளருக்கு மொத்தமாக விபூதி அடித்த ராஜஸ்தான் இளைஞர்
தேனி: தேனியில் வேலை பார்த்த கடைக்கு விபூதி அடித்த வேலையாள்.. தான் வேலை பார்த்த செல்போன் கடையில் வங்கிக்கணக்கின் பார்கோடை மாற்றி வைத்து நூதன முறையில் ரூ.17¼ லட்சம் மோசடி செய்துள்ளார் ராஜஸ்தான் இளைஞர்.. அவரை தேனி போலீசார் ராஜஸ்தான் சென்று கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 37 வயதாகும் மதன்சிங், செல்போன் உதிரிபாகங்கள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடையை நடத்தி வருகிறார். மதன் சிங், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் தனது கடையில் நடந்த நூதன மோசடி தொடர்பாக புகார் அளித்தார்.

அந்த புகாரில், "ராஜஸ்தான் மாநிலம் பார்மர் அருகே ஹார்னியான் பகுதியை சேர்ந்த 21 வயதாகும்
தூதாராம் (21) என்பவரை எனது கடையில் கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்த்தேன். ரூ.3 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்டு கடையில் மேலாளராக தூதாராம் வேலை பார்த்து வந்தார்.
நான் என்னுடைய செல்போன் கடையில் பண பரிவர்த்தனைக்காக வங்கிக்கணக்கின் பார்கோடினை வைத்திருந்தேன். அந்த பார்கோடை தூதாராம் அகற்றிவிட்டு, அவருடைய வங்கிக்கணக்கின் பார்கோடு விவரங்களை வைத்து பரிவர்த்தனை செய்து வந்தார். அந்த வகையில் ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்தார். இதேபோல் கடையில் பல தேதிகளில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 27 ஆயிரத்து 500 மோசடியாக எடுத்துக்கொண்டு ராஜஸ்தான் போய் விட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்" இவ்வாறு அந்த புகாரில் மதன் சிங் கூறியிருந்தார்.
பின்னர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தேனி நகர போலீசாருக்கு, மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்பேரில் முன்பணம் மற்றும் கடையில் மோசடி செய்தது என மொத்தம் ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 500 மோசடி செய்து விட்டதாக தூதாராம் மீது கடந்த மாதம் தேனி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தூதாராம் மோசடி செய்தது உறுதியான நிலையில், தூதாராமை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்று அங்கு வீட்டில் இருந்த தூதாராமை கைது செய்தனர்.
அவரை திங்கள்கிழமை அன்று தேனிக்கு அழைத்து வந்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மிரட்டலுக்கு பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்பது உறுதியானது. இதையடுத்து அவரை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications