ஓபிஎஸ் தாயார் மறைவு.. இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் கொடுக்க வேண்டும்.. சசிகலா இரங்கல்!
ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கடினமான நேரத்தில் ஓபிஎஸ்-க்கு மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் கடவுள் தர வேண்டும் என்று வேண்டுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்றிரவு தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

கதறி அழுத ஓபிஎஸ்
இந்த நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். விவரம் அறிந்த ஓ.பி.எஸ் சென்னையில் இருந்து உடனடியாக தேனி வந்தார். தனது தாயாரின் உடலைப் பார்த்ததும் காலை பிடித்து முகம் புதைத்து கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம். இதன் பின்னர் அருகில் இருந்த குடும்பத்தினர் அவரை தேற்றினர்.

இரங்கல்
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் ஓபிஎஸ் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரின் தாயாருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சசிகலா இரங்கல்
இந்த நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலா பதிவிட்டுள்ள ட்வீட்டில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

சசிகலா ட்வீட்
தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications