மங்காத்தா படம் போல் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ரகசிய கூட்டணி.. வெடி வீசும் டிடிவி தினகரன்!
தேனி: மங்காத்தா படம் போல் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் உள்ளே வெளியே என்று ஆட்டம் ஆடி கொண்டிருக்கிறார்கள் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி அமைத்து போட்டியிடத் தயாராகி வருகின்றனர். விரைவில், பாஜக கூட்டணியில் அமமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பு போட்டியிடும் சீட்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் தேனியில் நேற்று நடைபெற்றது. அதில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் என இருவரும் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரது கரங்களையும் இணைத்து வைத்தார் சையது கான்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "1999 தேனி நாடாளுமன்ற தேர்தலில் எனது வெற்றிக்காக பாடுபட்டவர் ஓபிஎஸ். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் அன்போடு தான் இருந்தோம். ஜெயலலிதா வழிநடத்திய இந்த இயக்கத்தை கபளீகரம் செய்தவரிடம் இருந்து கட்சியை மீட்கவே நாங்கள் ஒன்று இணைத்துள்ளோம். ஜெயலலிதா வழிநடத்திய இயக்கத்தை நாங்கள் மீட்க்காமல் விடமாட்டோம்.
தேனியில் இதே பங்களாமேடு பகுதியில் தான் ஜெயலலிதா என்னை முதன் முதலாக வேட்பாளராக அறிவித்தார். அரசியலில் நான் பிறந்த மண் தேனி தான். அதனால் தான் தேனி என்றாலே தேன் சாப்பிடுவது போன்று இருக்கும். தேனி சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் என்னை நிற்க வேண்டும் என்று சிலர் என்னிடம் கூறினார்கள். எப்போது தேனி தேர்தலில் நிற்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
அடுத்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவன் நான். பதவிக்காக யார் காலிலும் விழ மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். எம்ஜிஆர் கையில் இருந்த வெற்றிச் சின்னம் பிஎஸ்.வீரப்பா, நம்பியார் கையில் இருப்பது போல் எடப்பாடி பழனிசாமி கையில் இருந்ததால் தான் அமமுகவை நாம் தொடங்கினோம்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே நகரில் போட்டியிடும் எண்ணமே எனக்கு இல்லை. போட்டியிடுவதற்கு பெயர் பட்டியல் சசிகலாவிடம் வழங்கப்பட்டது. பின்னர் பெங்களூர் சிறையில் இருந்து என்னை போட்டியிடுமாறு கூறினார் சசிகலா. உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் என்னை வீட்டில் வந்து சந்தித்து, ஆர்.கே நகரில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி நீங்கள் போட்டியிட வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார் என்று கூறினார். சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டால் முதல்வராகி விடுவேன் என்ற பயமே பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்க காரணம்.
எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளார்கள் என்று மக்கள் பேசி வருகிறார்கள். மங்காத்தா படம் போல் ஸ்டாலினும், பழனிசாமியும் உள்ளே வெளியே என்று ஆட்டம் ஆடி கொண்டிருக்கிறார்கள். அதனை நாங்கள் முறியடிக்காமல் விடமாட்டோம். சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கையை மாற்றியதற்கு எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் கூட்டணி வைத்தது தான் காரணம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் திமுக கூட்டணிக்கு மாபெரும் மரண அடி கொடுக்க வேண்டும்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications