தேனி அருகே கைலாசநாதர் கோவில் சிசிடிவியில் தெரிந்த உருவம்.. பார்த்ததுமே ஆடிப்போன பொதுமக்கள்
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் மலைமேல் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள இடம் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். மிகவும் புகழ் பெற்ற இந்த கோவிலில் பலர் பவுர்ணமி கிரிவலம் வந்து செல்வார்கள். அப்படி வந்து செல்லும் பக்தர்கள் சிலர் மலை மேல் சிறுத்தை இருப்பதை பார்த்துள்ளார்கள். மேலும் சிறுத்தை உலா வந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை உலா வந்தது உறுதியாகி உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் தேனி மாவட்டத்தின் மிகவும் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கோயிலில் சிவபெருமானுக்கு உகந்த நாட்களாக பிரதோஷ நாட்களில் இங்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம் ஆகும்.

இந்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல் வருடாந்திர மகா சிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதேபோல் இங்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஏராளமான மக்கள் கிரிவலம் வருவார்கள். மிகவும் விசேஷமான இந்த கோயிலுக்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வந்து செல்வது வழக்கம்.
கைலாசநாதர் கோவிலை பொறுத்தவரை மிகவும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைக்குன்றில் அமைந்துள்ளது. இந்த பகுதி முற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். அகமலையை ஒட்டி அமைந்துள்ளது. இதில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான்கள், காட்டுமாடு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. குறிப்பாக சிறுத்தைகள் அடிக்கடி உலா வரும் பகுதியாக கைலாசநாதர் கோவில் பகுதி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகள், நாய்களை சிறுத்தை அடிக்கடி வேட்டையாடி வருகிறது. கடந்த வாரம் பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள், மலையில் சிறுத்தை இருப்பதை பார்த்துள்ளார்கள் . அப்போது எடுக்கப்பட்ட சிறுத்தை உலா வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க மலைப் பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டன. மேலும் வனத்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கைலாசநாதர் கோவில் மலைப்பகுதியில் நேற்று மீண்டும் சிறுத்தை உலா வந்தது. வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை உலா வந்த காட்சி பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் மலைப் பகுதியை ஒட்டிய குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுபோய் விட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications