கண்ணில் மிளகாய் பொடி வீச்சு.. அலறிய கணவனை.. அரிவாளால் வெட்டி சாய்த்த ஆண்டிப்பட்டி அழகுசின்னு
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கணவரை வெட்டிக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
குடிப்பழக்கம் பல குடும்பங்களை நிர்கதியாக்கி வருகிறது. கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்களுக்கு குடிப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. கூலி வேலை செய்யும் பலரும் குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துள்ளனர். சேமிக்க முடியாமல், நல்ல வாழ்க்கை சூழலை அடைய முடியாமல் பல ஏழைக்குடும்பங்கள் அவதிப்பட குடிப்பழக்கம் முக்கியமான காரணமாக உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கணவனின் குடிப்பழக்கத்தால் கொலையே நடந்துள்ளது.

தேனி மாவட்டம் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதியை சேர்ந்த சண்முகவேலுக்கு 37 வயது ஆகிறது. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அழகுசின்னு 31 வயதாகிறது. இவரும் கூலி வேலை செய்து வருகிறது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சண்முகவேலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி அழகுசின்னுவிடம் தகராறு செய்ததடன், அடித்து துன்புறுத்தி வந்தாராம். அப்படித்தான் ஞாயிறு இரவும் சண்முகவேல் மனைவியிடம் தகராறு செய்தாராம்.
இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அழகுசின்னு வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சண்முகவேல் முகத்தில் மொத்தமாக வீசியுள்ளார். அப்போது எரிச்சல் தாங்க முடியாமல் அவர் வலியால் அலறி துடித்திருக்கிறார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அழகுசின்னு அரிவாளை எடுத்து சண்முகவேலின் இடது கை, கால் மற்றும் பின் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் ரத்த வௌ்ளத்தில் கீழே சரிந்த சண்முகவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து, ராஜதானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதையடுத்து போலீசார் அழகுசின்னுவை கைது செய்த ராஜதானி போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறிய தகவல்களை போலீசார் தெரிவித்தார். அதன்படி, அழகுசின்னுவும் சண்முகவேலுவும் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்த்து வைத்துள்ளார்கள். ஆனால் அதன்பிறகும் சண்முகவேல் தினமும் மதுகுடித்துவிட்டு போதையில் தகராறு செய்து வந்தாராம்.
இதன் காரணமாக அழகுசின்னுக்கு கணவருடன் வாழ பிடிக்கவில்லை. இதனால் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் ஞாயிறு அன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து அழகுசின்னுவிடம் சண்முகவேல் தகராறு செய்தார். அப்போது கணவர் சண்முகவேல் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். மதுபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications