இந்து அமைப்புகளால் பரபரப்பு.. தேனியில் விநாயகர் சிலை எடுத்து செல்ல அனுமதி மறுப்பு! போலீஸ் குவிப்பு
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரைகளை போலீசார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கி உள்ளது.

அதேபோல் இந்து அமைப்பினரிடம் மாவட்ட வாரியாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் தான் நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களின் விற்பனை என்பது களைகட்டியது. பூ, பூஜை பொருட்களின் விலையும் அதிகரித்தது.
மேலும் பல்வேறு தரப்பினர் விநாயகர் சிலைகளை வாங்கி தங்களின் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். இந்நிலையில் தான் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதாவது ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து ஆண்டிப்பட்டியில் 3 கோவில்களில் மொத்தமாக வைத்திருந்தனர். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் அந்த சிலைகளை ஒவ்வொரு இடத்துக்கும் எடுத்து செல்ல முடிவு செய்தனர். அப்போது சிலைகளை எடுத்து செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.
அதாவது ஆண்டிப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள பெரிய பெரிய விநாயகர் சிலைகளில் ரசாயன கலவை பூசப்பட்டுள்ளதாக கூறி போலீசார் எடுத்து செல்ல அனுமதி மறுத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் அனுமதி கோரியும் அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆண்டிப்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதேவேளையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி போலீசாரும், விநாயகர் சிலை தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுரையில் ஒன்று என்னவென்றால் நீர்நிலைகளை மாசுப்படுத்தும் ரசாயனம் கலந்த சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என்பதாகும்.
இந்நிலையில் தான் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையில் ரசாயன பூச்சி இருந்ததால் அதனை எடுத்து செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications