நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுங்க! தெலுங்கு மக்கள் குறித்து இப்படி பேசலாமா? திடீரென பறந்த புகார்
தேனி: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
பிராமணர்களை இழிவுபடுத்திப் பேசுதல், பூணூல் அறுத்தல் உள்ளிட்ட செயல்கள் தமிழ்நாட்டில் நடப்பதைச் சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நேற்று நடந்த போராட்டத்தில் பிராமணர் சமூகத்தினர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், நடிகை கஸ்தூரி, காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கஸ்தூரி: அப்போது பேசிய கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சில கருத்துகளைக் கூறினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பிராமணர்களைத் தமிழர்கள் இல்லை என்று சிலர் சொல்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், யார் தமிழர் என்று சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார். மேலும், தெலுங்கு பேசும் 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்ததாகக் குறிப்பிட்டு சில கருத்துகளைத் தெரிவித்தார். அதுவே சர்ச்சையானது.
நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் அனைவரையும் அவமதித்து விட்டதாகப் பலரும் விமர்சித்தனர். குறிப்பாகத் தமிழ்நாடு பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரான சுதாகர் ரெட்டி இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் கூறிய தனது கருத்துகளை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற வேண்டும் என்றும் தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
மறுப்பு: இதற்கிடையே தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும் திமுக ஆதரவாளர்கள் தனது பேச்சை வேண்டும் என்றே திரித்துப் பரப்புவதாகவும் நடிகை கஸ்தூரி விளக்கமளித்தார். மேலும், தாம் தெலுங்கு மொழி பேசும் மக்களை அவமதிக்கும் வகையில் பேசவில்லை என்றும் திமுக ஆதரவாளர்கள் அத்தனையும் பொய்யாகப் பரப்புகின்றனர் என்றும் கூறியிருந்தார். மேலும், தனக்குத் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மீது அன்பும் மதிப்பும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
போலீஸ் நிலையத்தில் புகார்: இருப்பினும், கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இப்போது தேனி போலீஸ் நிலையத்தில் பெண்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலரும், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரபா என்பவர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறிய நடிகை கஸ்தூரி, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெலுங்கு மன்னர்கள் உருவப்படத்திற்கு முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்கத் தவறும் பட்சத்தில் சாதி ரீதியான பாகுபாட்டை ஏற்படுத்த முயல்வதாகக் கஸ்தூரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications