தமிழ்நாட்டு அரசியலில் கனவிலும் நினைக்காத மாற்றம்.. ஓபிஎஸ் வீடியோவை பகிர்ந்து திமுகவினர் போஸ்ட்
தேனி: திமுகவில் இணைந்த ஓ பன்னீர்செல்வம் திமுகவில் சீட் பெற்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். ஓ பன்னீர்வெல்வத்திற்கு ஆதரவாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பிரச்சாரம் செய்தார். அதேபோல் திருமாவளவன் பிரச்சசாரம் செய்தார். ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிரான தங்க தமிழ்செல்வனும் பிரச்சாரம் செய்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் கனவிலும் நினைக்காத மாற்றங்கள் இந்த தேர்தலில் நடந்துள்ளது. திமுகவினரே திகைப்போடு தற்போது ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் வீடியோவை ஷேர் செய்வது தான் காலத்தின் மாற்றமாக பார்க்கப்பபடுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஆயிரம் மாற்றங்கள் ஒவ்வொரு தேர்தலுக்கு நடக்கிறது. ஆனால், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இப்போது அரங்கேறி வரும் காட்சிகள், அரசியல் விமர்சகர்களை மட்டுமல்ல, திமுகவின் சாமனிய தொண்டர்களையும் மூச்சடைக்க வைத்துள்ளது.

அதிமுகவின் முகமாக, ஜெயலலிதாவின் நிழலாக, மூன்று முறை தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஓ. பன்னீர்செல்வம், இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போடிநாயக்கனூர் தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். "திமுகவை ஒழிப்பதே என் வாழ்நாள் லட்சியம்" என்று ஓபிஎஸ் முழங்கிய அதே மண்ணில், இன்று திமுகவின் வெற்றிக்காக ஓபிஎஸ் கையேந்துவது காலத்தின் விசித்திரமான கோலமாக பார்க்கப்படுகிறது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் போடிநாயக்கனூரில்ல் ஓபிஎஸ்-க்காகப் பிரச்சாரம் செய்த காட்சிதான் இந்தத் தேர்தலின் பெரிய விவாதமாக உள்ளது. நேற்று வரை அடிமை என்று விமர்சனம் செய்த உதயநிதி உள்பட திமுகவினர், அதே ஓபிஎஸ்க்காக இரவு பகலாக வேலை செய்கிறார்கள்.
அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஓபிஎஸ்-ஐ ஒரு "முதிர்ந்த அரசியல்வாதி" எனப் பாராட்டிப் பிரச்சாரம் செய்தார். இந்தத் தேர்தலின் ஆகச்சிறந்த முரண்நகை எதுவென்றால், ஓபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாகக் கடுமையாக எதிர்த்து வந்த தங்க தமிழ்செல்வன், இப்போது ஓபிஎஸ்-க்காகப் போடி தெருக்களில் வாக்கு சேகரிப்பதுதான். "அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு வாக்களியுங்கள்" என்று தங்க தமிழ்செல்வன் கேட்கும்போது, போடி தொகுதி மக்கள் "இது கனவா? நனவா?" என்று ஒருவரையொருவர் கிள்ளி பார்க்கிறார்கள்.
இதெல்லாம் தமிழ்நாட்டு அரசியல்ல நடக்கும்னு கனவுலயும் நினைச்சு இருக்க மாட்டோம்.😭
— Dr.Aravind Raja (@AravindRajaOff) April 16, 2026
காலம் தான் எவ்வளவு விசித்திரமானது.🔥 pic.twitter.com/RbLdqKJ4Ob
எப்போதும் ஓபிஎஸ்-ஐ 'தர்மயுத்தம்' என்றும், 'தியானம்' என்றும் கிண்டல் செய்து வந்த திமுக ஐடி வி நிர்வாகிகள் இப்போது ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோரின் பழைய கண்ணியமான பேச்சுகளையும், தற்போது அவர்கள் திமுக கொள்கைகளை ஆதரித்துப் பேசும் வீடியோக்களையும் தீவிரமாகப் பகிர்ந்து வருகிறார்கள். "அதிமுகவை எடப்பாடியிடமிருந்து மீட்க முடியாவிட்டாலும், தமிழகத்தை எடப்பாடியிடமிருந்து மீட்க திமுகவுடன் கைகோர்த்துள்ளேன்" என்கிற ஓபிஎஸ் எப்படியாவது போடியில் மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்கிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் கனவிலும் நினைக்காத மாற்றங்கள் இந்த தேர்தலில் நடந்துள்ளதற்கு போடிநாயக்கனூர் தொகுதியே நேரடிச் சாட்சியாக மாறியுள்ளது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற திமுகவின் வியூகத்திற்கு, ஓபிஎஸ் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுகிறார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.














Click it and Unblock the Notifications