ஓபிஎஸ்ஸுக்கு ‘விசுவாச கை’ கொடுத்த மெசேஜ்.. தெம்பாக அமர்ந்த பன்னீர்.. பண்ணை வீட்டில் ‘பரபர’ ஆலோசனை!
தேனி : ஓ.பன்னீர்செல்வத்தின் நெருக்கமான புள்ளியான அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான், ஓபிஎஸ் சென்னையில் இருந்தபோது ஆதரவாளர்களுடன் ஒரு மீட்டிங்கை நடத்தினார். அப்போது பேசப்பட்ட கருத்துகளை ஓபிஎஸ்ஸிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2 நாட்களாக தனது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் தனது பண்ணை வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆலோசனையில், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆதரவாளர்களிடம் கருத்துகளை ஓபிஎஸ் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸுக்கு சையது கான் சொன்ன மெசேஜ், பூஸ்ட் கிடைத்தது போல் ஆக்கியுள்ளது.

வேக வேகமாக முன்னேறிய ஈபிஎஸ்
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை கோஷத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி, கட்சியை முழுமையாக தன்வசப் படுத்துவதற்கான வேலைகளைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. அவரது நெருக்கமான ஆதரவாளர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் பேசி ஆதரவைத் திரட்டினர். இதையடுத்து, பொதுக்குழுவைக் கூட்டி, இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்தனர். இடையே, ஓபிஎஸ் செய்த தவறால், அதிமுக தலைமைக் கழக சாவியும் சுலபமாக எடப்பாடி பழனிசாமியின் சட்டைப் பைக்குள் சென்று விழுந்தது.

தேனிப் பக்கம் வீசும் காற்று
நீதிமன்றமும் ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான உத்தரவுகளை வழங்கியதால் வெற்றி மேல் வெற்றியைக் குவித்து முன்னேறிய ஈபிஎஸ்ஸுக்கு, தற்போது தொடர்ச்சியாக அடி மேல் அடி விழுந்து வருகிறது. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கியது போன்ற முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. டெல்லி பாஜக தலைமையின் ஆதரவையும் தன் பக்கம் திருப்ப முடியவில்லை. டெல்லி நாடாளுமன்ற சபாநாயகர், தமிழக சட்டப்பேரவை தலைவர் என இருவரின் ஆதரவும் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறது. இப்படியான நிகழ்வுகளால் ஓபிஎஸ்ஸின் கை சமீபமாக ஓங்கி வருகிறது.

அடுத்தடுத்த திட்டங்கள்
டெல்லி தலைமையின் கண்ணசைவு கிடைத்துள்ளதால், உற்சாகமாக வேலைகளைத் தொடங்கியுள்ளனர் ஓபிஎஸ் தரப்பினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து அழைப்பு விடுத்து நடக்கும் பொதுக்குழு கூட்டமே செல்லும் என்ற கட்சியின் விதியை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை நாடவும் ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. அதற்காக, இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமனம் செய்து, தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார் ஓபிஎஸ்.

சசிகலா ஆதரவு
இதற்கிடையே, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் ஆதரவைப் பெறும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார் ஓபிஎஸ். அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்துள்ளதாம். சசிகலாவோடு ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான இருவர் தொடர்ச்சியாக பேசி வருகின்றனராம். ஓபிஎஸ் தரப்பின் வேண்டுகோளுக்கு சசிகலாவும் செவி சாய்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபமாக, ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகவும், ஈபிஸ்ஸை அட்டாக் செய்யும் வகையிலும் சசிகலா பேசி வருவதற்குக் காரணம் இதுதான் என்கிறார்கள்.

மூவர் கூட்டணியில் தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனோடும் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான சிலர் பேசி வருகின்றனர். அதிமுக தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்ஸின் நம்பிக்கைக்குரியவவருமான சையது கான் சமீபத்தில் டிடிவி.தினகரனை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, நேரடியாகவே, எடப்பாடி பழனிசாமியின் கொட்டத்தை அடக்க, மூவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் சையது கான். அதற்கு மையமாகத் தலையசைத்துள்ளார் தினகரன்.

பண்ணை வீட்டில் ஆலோசனை
இந்நிலையில், சொந்த ஊருக்குச் சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், இரண்டு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பகல் நேரங்களில் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் அவர் மாலை நேரங்களில் கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு செல்வதாகவும் அங்கு தென்மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அவரைச் சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

பாசிட்டிவ் சிக்னல்
தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது பற்றி இந்த ஆலோசனையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களிடம் கருத்துக் கேட்டுள்ளார் ஓபிஎஸ். அனைவருமே, விரைவில் பயணத்தை தொடங்குங்கள் என்றும், ஏற்பாடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் பேசியுள்ளனர். பல்வேறு முக்கிய நிர்வாகிகள் உடனான சந்திப்புக்குப் பிறகு அவர்களின் கருத்துகளை வைத்து, நெருக்கமான புள்ளிகளின் ஆலோசனைகளையும் கேட்டு வருகிறாராம் ஓபிஎஸ்.

சையது கான் மெசேஜ்
தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்ஸின் நிழல் போல இருப்பவருமான சையது கான், சமீபத்தில் ஓபிஎஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்து வந்தபோது தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஒரு மீட்டிங்கை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசிய விஷயங்கள், நிர்வாகிகளின் கருத்துகளை ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்துள்ளார். நிர்வாகிகள், கட்சி நம் கையை விட்டுப் போகக்கூடாது என்றும், ஓபிஎஸ் எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஆதரவோடு பின்னால் நிற்போம் என்றும் தெரிவித்ததாக ஓபிஎஸ்ஸுக்கு தெரியப்படுத்தியுள்ளார் சையது கான்.

பலம் அதிகரிக்க
மேலும், இன்னொரு முக்கிய விஷயத்தையும் அழுத்தமாகக் கூறியுள்ளார். சசிகலா, டிடிவி.தினகரன் ஆதரவையும் பெற்றால், நம் பலம் பல மடங்கு அதிகரிக்கும், எளிதாக எடப்பாடி பழனிசாமியை சாய்த்து விடலாம் என நிர்வாகிகள் தெரிவித்த விஷயத்தையும் காதில் போட்டுள்ளார் சையது கான். இதையடுத்து, சசிகலாவுடன் பேசுவது, சுற்றுப் பயணத்தைத் தொடங்குவது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி மூத்த நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் மீண்டும் ஆலோசனை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications