நடுங்கிய நெல்லை.. 9 ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சகமாணவன்.. மத்திய அரசு பள்ளியில் பயங்கரம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசு பள்ளியில் படிக்கும் 9 ம் வகுப்பு மாணவனை, சகமாணவன் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே விஜயநாராயணம் உள்ளது. தெற்கு விஜயநாராயணம் பகுதியில் ஐஎன்எஸ் எனும் இந்திய கப்பற்படை தளம் அமைந்துள்ளது. இந்த கப்பற்படை தளத்தின் வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த மாணவர் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் நாங்குநேரியை சேர்ந்த இன்னொரு மாணவரும் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று மதியம் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவன் தண்ணீரை நாங்குநேரியை சேர்ந்த மாணவன் மீது பீய்ச்சி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின்போது அவர்கள் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அதன்பிறகு அங்கிருந்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் நாங்குநேரியை சேர்ந்த மாணவன் இன்று தனது வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்து பேக்கில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அதன்பிறகு தன் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த மூலக்கரைப்பட்டியை சேர்ந்த சகமாணவனை பள்ளியில் வைத்து அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.
இதில் காயமடைந்த மூலக்கரைப்பட்டியை சேர்ந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த மாணவனர் தற்போது நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு வள்ளியூரில் அரசு பள்ளியில் சாதிய மோதலில் மாணவர்கள் இடையே மோதல் நடந்தது. அப்போது 22 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது வள்ளியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 30ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருசமூகங்களை சேர்ந்த அந்த மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் 22 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தான் தற்போது விஜயநாராயணத்தில் உள்ள மத்திய அரசு பள்ளியில் இருமாணவர்கள் இடையேயான மோதலில் ஒருவர் இன்னொருவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இப்படி தொடர்ந்து மாணவர்கள் இடையே பள்ளியில் கடும் மோதல் நடந்து வருவது திருநெல்வேலி மாவட்டத்தை அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications