தூங்கிய மகள்கள்.. வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன்.. ஆட்சியரிடம் கண்ணீருடன் தாய் கதறல்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வீட்டுக்குள் கண்ணாடி விரியன் பாம்பு நுழைந்ததை அடுத்து அந்த பாம்புடன் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் வன்னி கொணந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சமரச செல்வி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு சமரச செல்விக்கு சொந்தமான இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்டினார்.

வீடு கட்டப்பட்ட இடத்தில் வில்லங்கம் இருப்பதாக கூறி தற்போது வரை மின் வாரியம் அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. பல முறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம் கூட நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி புகார் அளித்துள்ளார்.
ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திங்கள்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சமரச செல்வி கையில் ஒரு செத்த பாம்பையும் எடுத்து வந்தார். அப்போது சிறிது நேரத்தில் அழுதார். அந்த பாம்பு கண்ணாடி விரியன் , அது இறந்துகிடந்தது.
அந்த பாம்பை பிடித்து தூக்கி காட்டிய அவர் எனது மூத்த மகள் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. நன்றாக படிக்கும் நிலையிலும் மகள் படிப்பிற்கு உதவ முடியாத நிலையில் இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். சில நாட்களாக தனது வீட்டிற்குள் விஷ ஜந்துக்கள் வருவதாக கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் மகள்கள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த இந்த கண்ணாடி விரியன் பாம்பை தான் அடித்து கொன்றுவிட்டதாகவும் ஆட்சியர் எங்கள் வீட்டில் மின்இணைப்பு இல்லாததால் விஷ ஜந்துக்கள் எல்லாம் நுழைகிறது என்பதை ஆட்சியர் நம்ப மாட்டார் என்பதற்காக செத்த பாம்பை கையில் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து சமரச செல்வியிடம் இருந்த பாம்பை பறிமுதல் செய்த போலீஸார் அவரையும் அவரது மகளையும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க செய்தனர். புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications