அஜித்குமாரின் 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து.. நெல்லை திரையரங்கில் ரசிகர்கள் அதிர்ச்சி!
நெல்லை: அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், இதற்காக திரையரங்கு முன்பு கட் அவுட் அமைக்கும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நெல்லை பிஎஸ்எஸ் திரையரங்கில் 200 அடிக்கு வைக்கப்பட்ட கட் அவுட் இன்று திடீரென சரிந்து விழுந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக விஜய் அஜித் இருந்து வருகிறார்கள். இவர்களது படத்தின் ரிலீசின் போது தியேட்டர்களில் கூட்டம் கலைகட்டும். முதல் நாளில் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் ஷோவை கொண்டாடுவார்கள். இப்படி கொண்டாடும் போது ஒருசில நேரங்களில் சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒன்றாக வெளிவந்தன.

இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதில் சென்னை கோயம்பேட்டில் அஜித்தின் துணிவு படம் வெளியானது. அப்போது நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் திரைப்படத்தை காணுவதற்கு முன்பாக திரையரங்கம் முன்பு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அப்போது அங்கு வந்த பால் லாரி வண்டியில் ஏறி ஆட்டம் போட்ட அஜித் ரசிகர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் அதே மாதிரி அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நெல்லை பிஎஸ் எஸ் திரையரங்கில் சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான டிரைய்லர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முந்தைய படமான விடாமுயற்சி பெரிய அளவில் ரசிகர்கள் ஈர்க்காததால் இந்த படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
அதற்கு ஏற்றவாறே ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளதாகவே ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியை பெற்ற நிலையில், அஜித் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் ஏமாற்ற மாட்டார் என்றும், படம் நன்றாக வந்துள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். வரும் 10 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் அதற்காக கட் அவுட் வைப்பது போன்ற வேலைகளில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
விஜய் அஜித் ரசிகர்கள் இடையே போட்டி இருந்து வருவதால், கட் அவுட்டை பெரிதாக வைக்க அஜித் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிஎஸ் எஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 200 அடிக்கு கட் அவுட் வைக்க அஜித் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கம்பிகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டு, கட் அவுட் ஒட்டும் பணியில் ரசிகர்கள் இன்று ஈடுபட்டு வந்தனர்.
அப்போது 200 அடி உயரம் என்பதால் கம்பிகள் சரியாக நின்றதாக தெரியவில்லை. இதனால் கீழே விழும் அபாயம் ஏற்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள் அந்த கம்பிகளுக்கு அருகில் நிற்காமல் விலகி வந்தனர். இதையடுத்து 200 அடிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த கட் அவுட் கம்பி நொடிப்பொழுதில் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கட் அவுட் கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்று பொதுவான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கட் அவுட் சரிந்து விழுந்து உயிர் பலி ஏற்படக்கூடும் என்பதால், தமிழக அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். நல் வாய்ப்பாக கட் அவுட் சரிந்து விழுவது முன்கூட்டியே தெரிந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விழுந்திருந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். முன்னதாக இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications