தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் கனவுகளை நிறைவேற்ற பாஜக பாடுபட்டு வருகிறது.. நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு
நெல்லை: திருநெல்வேயில் பாஜக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் கனவுகளை நிறைவேற்ற பாஜக பாடுபட்டு வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
வரும் 19 ஆம் தேதி தமிழகம் உள்பட 22 மாநிலங்களில் முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இன்னும் 4 நாட்களே இருக்கிறது. தேர்தல் பரப்புரை வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. தேர்தலுக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இதனால் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டியில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
தமிழில் பேசிய மோடி: அப்போது அவர் , நெல்லையில் நயினார் நாகேந்திரன், தென்காசியில் ஜான் பாண்டியன், குமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் விஜயசீலன், விருதுநகரில் ராதிகா சரத்குமார், விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் நந்தினி ஆகிய வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி பேசியதாவது:-
தமிழ் சகோதர சகோதரிகளே.. வணக்கம் நெல்லை.. என தமிழில் பேசி பிரதமர் மோடி பேச தொடங்கினார். மீனவர்களுக்கு முத்து பாசி, என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பாஜக தேர்தல் அறிக்கையாக நாங்கள் வெளியிட்டுள்ளோம். அதுவும் நம் தமிழ் புத்தாண்டில் நாங்கள் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். பாஜக தேர்தல் அறிக்கை, வளர்ந்த நகரம் தான் வளர்ந்த பாரதமாக மாறும் என்ற கோட்பாட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது.
புல்லட் ரயில்: தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போய் உள்ளனர். இந்த கூட்டத்தையும், உற்சாகத்தையும் பார்த்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தூக்கும் தொலைந்து போயிருக்கும். நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பாஜக கொண்டு வந்தது. இப்போது சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
மக்களுக்கு ஏன் என்னை பிடிக்கிறது: அடுத்ததாக புல்லட் ரயிலை தென் மாநிலங்களில் இயக்க ஆலோசனை செய்கிறோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் தொடங்கும். மோடிக்கு இப்போது ஆதரவு பெருகி வருகிறது. மக்களுக்கான தேவை என்ன என்பதை புரிந்து நான் செய்துகொண்டு வருகிறேன். அதனால் தான் எனக்கு ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 1 கோடியே 16 லட்சம் குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளோம். 12 லட்சம் வீடுகள் கட்டியிருக்கிறோம். 47 லட்சம் பேருக்கு கியாஸ் இணைப்பு கொடுத்துள்ளோம். 57 லட்சம் கழிப்பறைகள் கட்டியிருக்கிறோம். முத்ரா லோன் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இப்படி எல்லாம் தொண்டு செய்தால் மக்களுக்கு ஏன் என்னை பிடிக்காது.
திருவள்ளுவர் பண்பாட்டு மையம்: இங்க பாருங்க ஒரு சின்ன குழந்தை பாரத மாதா வேடமிட்டு வந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு கரகோஷம் கொடுங்க. தமிழ் மொழியை நேசிக்கிறவங்களும், தமிழ் பாரம்பரியத்தை கடைப்பிடிப்பவர்களும் இப்போது பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும்.
வீர பாண்டிய கட்டப்பொம்மனின் வீரமும், வேலுநாச்சியாரின் வீரமும், மருது சகோதரர்கள் என எண்ணற்ற அனைவரும் துணிச்சல் மிக்கவர்கள். அன்னியர்களை எதிர்த்து போராடியவர்கள். முத்துராமலிங்க தேவரின் தாக்கத்தினால் தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு கூட இந்த பகுதியில் இருந்து இவ்வளவு பேர் வருவார்கள் என்ற வியப்பை கொடுத்திருந்தது.
எம்ஜிஆர் கனவுகளை: வ உ சிதம்பரம் பிள்ளை சுதந்திரத்திற்காக தனது வாழ்க்கையை சிறையிலேயே கழித்தார். அடுத்ததாக தமிழ்நாட்டுக்கு நல்லாட்சியை கொடுத்தார் காமராஜர். காமராஜரின் ஆட்சியின் வழியிலேயே பாஜகவும் ஆட்சி செய்ய விரும்புகிறது. திமுகவும் காங்கிரசும் தொடர்ந்து காமராஜரை அவமதித்தது.
என்னுடைய லட்சியம் தூய்மையான அரசியல் செய்வது தான். அதில் பயணிக்கும் போது எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவரின் கனவுகளை நினைவாக்கும் பாதையில் பாஜக பயணித்து கொண்டு இருக்கிறது. சட்டப்பேரவையில் வைத்து ஜெயலலிதாவை திமுகவினர் எப்படி துன்புறுத்தினர் என்பதை யாராலும் மறக்க முடியாது.
2047 பற்றியே சிந்தனை: பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவு பாஜகவுக்கே இருக்கிறது. முதல் முறை வாக்காளர்களின் மனது பாஜக பக்கமே உள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. எதிர்க்கட்சிகள் அசந்து போவது போல, ஆச்சரியப்படுவது போல எங்களுக்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்கள்.
24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும், 2047 பற்றியே நான் சிந்திக்கிறேன். இளைஞர்கள் அனைவரும் இந்த முறை எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு முறை பாஜகவுக்கு வாக்களித்து பாருங்கள். உங்களை பற்றியே நாங்கள் யோசித்துக்கொண்டு இருக்கிறோம். பேரலையாக வரும் மக்களை கண்டு தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.
நிறைவு செய்கிறேன்: தமிழகத்தில் நான் பரப்புரையை நிறைவு செய்கிறேன். வரும் 19 ஆம் தேதி நீங்கள் போடுகின்ற வாக்குகளை எதிர்நோக்குகிறேன். மீண்டும் மோடி .. மீண்டும் மோடி.. என்று பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications