சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ..தீபக் ராஜா உடலுடன் புரட்சியாளர் புத்தகங்கள்! 2000 போலீஸ்..அமைதியான நெல்லை!
நெல்லை: நெல்லையில் கடந்த வாரம் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜாவின் உடல் நேற்று பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரை புதைத்த போது புரட்சியாளர்களின் புத்தகங்களையும் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் கடந்த வாரம் தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றார்.

அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை, அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தீபக் ராஜா: தனது கண்முன்னே காதலனை வெட்டி கொலை செய்ததைக் கண்டு தீபக் ராஜாவின் காதலி கதறி அழுதார். முதல்கட்ட விசாரணையில் தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலவில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாதி பின்னணியோடு அடிக்கடி மோதி வருகின்றனர்.
பிரபல ரவுடி: அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தீபக்ராஜா கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. எனவே ஜாதி மோதல் காரணமாகவே தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
குற்றவாளிகள் கைது: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நவீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் கொலையாளியான நவீன் பல லட்சம் பெற்றுக் கொண்டு தீபக் ராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. கொலைக்கு தீபக் ராஜாவின் காதலியின் தோழி உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரும் கைது செய்யப்படவுள்ளார் என கூறப்படுகிறது. இதற்கிடையே தீபக் ராஜா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீபக் ராஜாவின் உறவினர்கள் அவரது உடலை வாங்காமலேயே இருந்தனர்.
இறுதி ஊர்வலம்: இதனால் ஒரு வாரமாக உடலானது நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தீபக் ராஜாவின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர். இதையடுத்து நேற்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கார்கள் புடை சூழ தீபக் ராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான வாகை குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பலத்த பாதுகாப்பு: சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு மணி நேரம் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து 2000 போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இறுதி ஊர்வலத்தில் மட்டும் டிஐஜி, எஸ்பி உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகளோடு 500 போலீசார் நடந்தே சென்றனர். இதனால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் நெல்லை அமைதியாகவே இருந்தது.
புரட்சியாளர்கள் புத்தகம்: தொடர்ந்து அவரது உடல் வாகை குளத்தில் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது தீபக் ராஜாவின் உடலுடன் சவப்பெட்டியில் சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட புரட்சியாளர்களின் புத்தகங்களை வைத்து அவரது ஆதரவாளர்கள் அடக்கம் செய்தனர்.












Click it and Unblock the Notifications