ஒரு நாடகம் பாக்க முடியுதா? தண்ணீ திறக்கிற ஆளை டிஸ்மிஸ் பண்ணுங்க! நெல்லை ஸ்லாங்கில் கோபப்பட்ட பாட்டி
திருநெல்வேலி: தண்ணீ வராமல் மனுஷங்க ஒரு நாடகத்தை கூட பார்க்க முடியலை. இவன் எப்போ தான் தண்ணீர் திறக்கானு தெரியமாட்டேங்குதில்ல.. எவ்வளவு நாடகம் போய்விடுகிறது?. இந்த ஆளை முதல்ல டிஸ்மிஸ் பண்ணுங்க.. ஒழுங்கா தண்ணீர் திறக்காத ஆளு எதுக்கு? என கொடத்தை தூக்கி கொண்டு வீதியில் இறங்கி போராடிய மூதாட்டி நெல்லை ஸ்லாங்கில் தண்ணீர் திறப்பவரை விளாசிய வீடியோ அதிக கவனம் பெற்றுள்ளது.
திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றிய இடங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி பொதிகை நகரில் சரியாக குடிநீர் விநியோகம் செய்வது இல்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று பொதுமக்கள் குடத்துடன் திரண்டு திடீர் போராட்டம் நடத்தினர். இந்த வேளையில் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசினர்.
இந்த வேளையில் பாட்டி ஒருவர் நெல்லை ஸ்லாங்கில் தண்ணீர் திறக்கும் நபரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் அந்த பாட்டி தண்ணீர் பிரச்சனை மட்டுமின்றி, தண்ணீர் பிரச்சனையால் தன்னால் ஒரு நாடகம் கூட பார்க்க முடியலை என ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தது தான் ஹைலைட்டாக உள்ளது. இதுதொடர்பாக அந்த பாட்டி கூறியதாவது:
பொதிகை நகருக்கு 4 நாளுக்கு ஒருநாள், 2 நாளுக்கு ஒரு நாள் என்று கூட தண்ணீர் ஒழுங்கா வரமாட்டுக்குது. 10 மணிக்கு, 2 மணிக்குக்குனு தண்ணீ திறக்காங்க. அந்த மாதிரி ஆட்களை ஏன் தண்ணீர் திறக்கும் வேலைக்கு வைக்கிங்க. அவரை டிஸ்மிஸ் பண்ணுங்க. அந்த ஆள் தேவையில்லை. ராத்திரி 10 மணிக்கு தொட்டியை உத்து உத்து பார்க்கிறது தான் சோலியா?
எங்க வீட்டில் மோட்டாரும் கிடையாது. யாருகிட்ட கேட்டாலும் ஒரு குடம் தண்ணீர் தரமாட்டா. இப்போ தான் வரவர பொதிகை நகர் ரொம்ப மோசம். முதல்ல தண்ணீர் நல்லா வந்துச்சு. அப்போ வீடு காலியா கெடக்கா.. காலியா கெடக்கானு தேடிதேடி வந்தாங்க. இப்போ தண்ணீர் தான் இல்லையே .. அங்கே எதுக்கு போறோம்ங்கிற கதையா ஆகிட்டு..
இங்க இருந்த டேங்க்கை இடிங்காதீங்கனு சொன்னோம். கேட்காம இடிச்சிட்டாங்க. இப்போ மறு டேங்க் கட்டி இருக்காங்களா.. கட்டவே இல்லை. சொன்னபடி எங்க செஞ்சாங்க இந்த கவர்மென்ட்டு. எல்லாம் கேப்பாங்க அப்புறம் துடைச்சிட்டு போயிருவாங்க. அவ்ளோதான். வருஷம் என்னாச்சு? நீர்மூழ்கி வைச்சி தரேனு சொன்னாங்க.. இன்னும் அதை செய்யல.. கவுன்சிலர் அய்யா அங்க வாங்க.. இங்க வாங்க.. மீட்டிங்கிற்கு வாங்கனு சொல்றாரு.. எப்படி வர முடியும். ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்காங்களானா? இல்லை.

தண்ணீர் திறக்கிறவங்க கிட்ட இருந்து செல்லுல கவுன்சிலருக்கு மெசேஜ் போயிரும். தண்ணீர் திறந்துட்டேனு.. ஆனால் கவுன்சிலர் வந்து பர்ககிறது இல்லை. வந்து பார்த்தா தானே தெரியும். தண்ணீர் திறந்து இருக்கா.. இல்லையானு.. அப்போ நாங்க பொம்பளைங்க கொடத்த தூக்கிட்டு தான் வருவோம். நாளை பிள்ளையார் சதுர்த்தி. வீடு தூக்கல. ஒன்னும் தூக்கல. விளக்கு துலக்கல. இங்க வந்து காத்து கிடக்கிறோம்.
தண்ணீர் வராமல் மனுஷங்க ஒரு நாடகத்தை கூட பார்க்க முடியலை. ஆமா சொல்லுங்க.. தண்ணீர் வராம எப்படி நாடகத்தை பார்க்க? இவன் எப்போ தான் தண்ணீர் திறக்கானு தெரியமாட்டேங்குதில்ல.. எவ்வளவு நாடகம் போய்விடுகிறது?. தண்ணீர் நிம்மதியா வந்தா நாங்களும் நாடகத்தை மொத்தமா பார்ப்போம். எங்க வயசுல அதை தானே பார்க்க முடியும். தண்ணீ வருதா? தண்ணீ வருதானு? உத்து உத்து பார்த்துகிட்டே இருக்க முடியுமா? ரொம்ப மோசம்'' என காட்டமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications