எல்லா உயிர்களும் ஒன்றுதானே.. கள்ளக்குறிச்சி போல் தென்காசியில் குரல்.. உடனே முதல்வர் செய்த நற்செயல்
திருநெல்வேலி: தென்காசி சாலை விபத்தில் தாயை பறிகொடுத்த சிறுவன் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியும், மாதாந்திர உதவித்தொகையும் அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கி அரசு உத்தரவிட்ட நிலையில், தென்காசியில் கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல தறிகெட்டு வேகமாக வந்த லாரி மோதி உயிரிழந்த குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தாய் தந்தையை பறிகொடுத்த குழந்தைக்கும் அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி தென்காசி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராவணன் வெளியிட்ட பதிவில், எல்லா உயிர்களும் ஒன்றுதானே.. கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கி உள்ளது. ஆனால் கடந்த 13ஆம் தேதி தென்காசி மாவட்டம் தென்காசி ஈனா விலக்கு அருகில் அரசினுடைய தவறான கொள்கையால் கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல தறிகெட்டு வேகமாக வந்த லாரி பேருந்து மீது மோதி நடைபெற்ற கோர விபத்தில் பலியான தாய் மற்றும் மூன்று வயது குழந்தை குடும்பத்தினருக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை . அந்த குடும்பத்தில் தற்போது ஒரே ஒரு குழந்தை மட்டுமே இருக்கிறது .
ஏற்கனவே தந்தையை இழந்த அந்த குழந்தை இந்த விபத்தில் தாயையும் சகோதரனையும் இழந்து தனி மரமாக நிற்கிறது. நிர்கதியாக இருக்கும் அந்த குழந்தைக்கு உடனடியாக தக்க நிவாரணத்தை மாநில அரசு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் பேசி அதற்கான நிவாரணத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஓடோடி வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது கட்சி சார்பில் நிவாரணமும் அரசு செய்ய வேண்டிய உதவிகளை உடனடியாக செய்ய வலியுறுத்தி வற்புறுத்தி உள்ளது . ஆனால் கனிமவள லாரியால் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினர் நிலை குறித்தும், கனிம வள லாரிகளை கட்டுப்படுத்த மாநில அரசை வலியுறுத்தியும் எந்த கட்சியுமே வாய் திறக்காதது வேதனை அளிக்கிறது. எல்லா உயிர்களும் ஒன்றுதானே.." இவ்வாறு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த விவகாரம் உடனே முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து உடனே அந்த குழந்தைக்கு படிக்க தேவையான நிதிஉதவி அளித்தும், நிவாரண உதவி அளித்தும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் இலத்தூர் விலக்கு அருகில் கடந்த 13ம்தேதி பிற்பகல் 3.30 மணியளவில் சாலை விபத்தில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சிவராமபேட்டையைச் சேர்ந்த அழகுசுந்தரி (வயது 32), அவரது மகன் அக்சய பாலன் (3) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அழகுசுந்தரியின் கணவர் மாரித்துரை கடந்த 2021ம் ஆண்டில் காலமாகிவிட்டார் என்றும், இந்த விபத்தில் தற்போது அழகுசுந்தரியையும் இழந்து, அவர்களது மூத்த மகன் சிறுவன் சர்வேஸ்வரன் பெற்றோர் இருவரையும் இழந்து வாடுகிறான் என்பதை அறிந்து பெரிதும் வருந்தினேன். பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுவன் சர்வேஸ்வரனின் பெயரில் ரூ.5 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வைப்பீடு செய்ய உத்தரவிட்டுள்ளேன். மேலும் சிறுவன் சர்வேஸ்வரனின் பராமரிப்பிற்காக சமூக நலத்துறையின் மூலம் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.4,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications