காங்கிரஸ் நிர்வாகி மரணம்.. கடிதத்தில் ரூபி மனோகரன் பெயர்.. “அபாண்ட குற்றச்சாட்டு”.. பரபர விளக்கம்!
நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எழுதியதாக வெளியாகியுள்ள கடிதத்தில் தனது பெயர் இடம்பெற்ற நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ள ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த நிலையில் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

சந்தேக மரணம் என்ற பெயரில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெயக்குமார் தனசிங் புகார் அளித்ததாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜெயக்குமார் எனக்கு மிக நெருங்கிய நண்பர். எங்கள் கூட்டணி வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர், நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்தோம். அவரது இழப்பு எனக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு" என்றார்.
பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக உங்கள் மீது புகார் உள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "அதில் உண்மை இல்லை. அவருக்கும் எனக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் எதுவுமில்லை. என் மீது வேண்டுமென்றே பழி போட வேண்டும் என்று யாரோ பின் புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்கு தோன்றுகிறது.
உண்மை என்ன என்று காவல்துறை நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடுகளுமே கிடையாது. நாங்கள் அண்ணன், தம்பி போல இருந்தோம். இந்த மரணம் தொடர்பாக என் மீது உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருகிறது. காவல்துறையின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன்.
எனக்கும் ஜெயக்குமாருக்கும் வரவு செலவு நடந்தது இல்லை. நாங்கள் அண்ணன், தம்பி போல்தான் பழகினோம். கடைசி வரை நண்பர்களாக இருந்தோம். இதன் பின்புலத்தில் யாரோ செயல்படுவதாக தெரிகிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. நான் நாங்குநேரி தொகுதியில் சிறப்பாக செயல்படுவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications