திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்.. யார் என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.. கனிமொழி!
நெல்லை: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடர்வதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக - காங்கிரஸ் பல ஆண்டுகளாக கூட்டணியால செயல்படுவதாக கூறிய கனிமொழி, திமுக கூட்டணியில் நிச்சயமாக புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் சுமூக உறவு இல்லாமல் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் தவெக உடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் ஜனவரி 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனையில் திமுக கூட்டணியில் தொடர்வது என்ற முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் கார்கே மற்றும் ராகுல் காந்தியை திமுக எம்பி கனிமொழி சந்தித்தார்.
சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின் தமிழ்நாடு திரும்பிய கனிமொழி, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நெல்லையில் இன்று தனியார் விடுதியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பின் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக - காங்கிரஸ் கட்சிகள் நீண்ட ஆண்டுகளாக கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன.
அதில் எந்த மோதல்போக்கும் இல்லை. அதேபோல் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. திமுக கூட்டணிக்கு வரும் புதிய கட்சிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக விரைவில் திமுக உடனான கூட்டணியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications