திமுக எம்.பி ஞான திரவியம் முன் ஜாமீன் கோரி மனு.. விசாரணைக்கு எடுக்க அனுமதி அளித்தது கோர்ட்!
நெல்லை: நெல்லை திமுக எம்.பி ஞான திரவியம் முன் ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எம்.பி ஞான திரவியம் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுக்களை வரும் 30ஆம் தேதி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருநெல்வேலி டயோசீசன் நிர்வாகத்தில், பிஷப் பர்னபாஸ் மற்றும் லே செயலாளர் ஜெயசிங்கின் ஆதரவாளரான திமுக எம்.பி ஞான திரவியம் ஆகியோருக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. டயோசீசன் நிர்வாகத்தில் தனிச்சையாக செயல்படும் எம்.பி ஞான திரவியம் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ஜான்ஸ் பள்ளி தாளாளர் பதவியில் இருந்தும், திருமண்டல உயர் கல்விநிலைக்குழு செயலர் பதவியில் இருந்தும் பிஷப் பர்னபாஸ் அவரை நீக்கி விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜான்ஸ் பள்ளி வளாகத்திலும், டயோசீசன் அலுவலகத்திலும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக தலைமை, எம்.பி.ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மத போதகர் காட்பிரே நோபிள் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதனை அடுத்து நேற்று, ஒரு கும்பல் டயோசீசன் அலுவலக வளாகத்தில் மத போதகர் காட்பிரே நோபிளை அடித்து சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி தாக்கியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. தாக்குதலுக்கு உள்ளான மத போதகர் காட்பிரே நோபிள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் எம்.பி ஞான திரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள மீது புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணையை தொடங்கிய பாளையங்கோட்டை போலீசார், திமுக எம்.பி ஞான திரவியம் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் மற்றும் சொத்து நிர்வாக அதிகாரி மூன்றடைப்பு ஜான், ஆடிட்டர் மைக்கேல் உட்பட 33 பேர் மீது 147 - சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்தல், 294B - பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் செயல்படுதல், 323 - தன்னிச்சையாக காயப்படுத்தும் செயலில் ஈடுபடுவது, 109 - குற்றம் செய்ய தூண்டி விடுதல், 506 (1) - மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் விடுப்பது என 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக டயோசீசன் அலுவலகத்தில் நிர்வாக ரீதியிலான மோதல் போக்கு தொடர்ந்து பரபரப்பாகி வரும் நிலையில் தற்போது திமுக எம்.பி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஞானதிரவியத்துக்கு திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை எம்.பி ஞான திரவியம் முன் ஜாமின் கோரி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவத்தில் எம்.பி ஞான திரவியம் உள்ளிட்ட 10 பேரும் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுக்களை வரும் 30ஆம் தேதி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications