பேனா நினைவு சின்னத்தை கடலில்தான் வைக்க வேண்டுமா? தரையிலேயே வைக்கலாமே.. சொல்வது எடப்பாடி பழனிசாமி!
பேனா நினைவு சின்னம் பற்றி எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி: கருணாநிதி நினைவிடத்திற்கு அருகிலேயே பேனா நினைவு சின்னம் அமைக்கலாம் என்றும், கடலில் அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எழுந்துள்ள எதிர்ப்பை எண்ணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என்று விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான், பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசு விவாதமாக மாறியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் அதிமுக முக்கிய நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், திமுக ஆட்சி 21 மாத காலத்தை நிறைவு செய்துள்ளது. இந்த 21 மாத காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பணியை கூட செய்யவில்லை.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைய பணிகள் இந்த தொகுதியில் செய்யப்பட்டது. மழையால் டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டு தொகை பெற்று தந்த அரசு அதிமுக அரசு. எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தற்போது ரூ.20 ஆயிரம் தான் கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.

பேனா நினைவு சின்னம்
தொடர்ந்து பேனா நினைவு சின்னம் பற்றிய கேள்விக்கு, திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு நினைவிடமும், மதுரை நூலகமும் மட்டுமே அமைத்துள்ளார். அதேபோல் பேனா நினைவு அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதுவும் கடலில் அமைக்க முயற்சி நடக்கிறது. எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்றுதான். ஆகவே, தரையிலேயே வைக்கலாம். மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள், கருத்துக் கேட்பு கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையில் அமைக்கலாம்
இவற்றையெல்லாம் எண்ணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நினைவு மண்டபத்திலேயே அழகான பேனா நினைவு சின்னம் அமைக்கலாம். இது எனது கருத்து. பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதனை கடலில் வைக்க வேண்டிய தேவையில்லை. அதேபோல் ரூ.81 கோடியில் அமைக்க வேண்டிய அவசியமில்லை. அந்த தொகையில் மாணவர்களுக்கு பேனா வழங்கலாம். மாணவர்களும் அதனை நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
